இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை

இனப் பாகுபாடு இந்தியர்களுக்கு சவால்

குறைந்த வருமானம் பெறும் நிலையில் இருந்து இந்திய  சமூகத்தினர் வெளியே வருவதற்கு அவர்களிடம் ஆற்றல் போதுமான அளவில் இல்லை என்பது முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. மாறாக இனப் பாகுபாடுதான் அவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கின்றது என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்தார்.

சில கல்விமான்கள் வெளியிட்டிருக்கும் கருத்துகள் குறித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்திய சமூகத்திற்குப் போதுமான ஆற்றல் நிலை இல்லை எனவும் குறைந்த வருமானம் பெறக்கூடிய வளையத்தில் இருந்து வெளியே வருவதற்கு மற்ற இனத்தினருடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இனப் பாகுபாட்டை எதிர்நோக்குவதுதான் என்று ஜசெக மத்திய செயலவை உறுப்பினருமான இராமசாமி குறிப்பிட்டார்.

இந்தியர்களுக்கு ஆற்றல் இல்லை அல்லது தகுதிகள் இல்லை என்பது பிரச்சினையல்ல. ஆனால் இன ரீதியான சோதனையில் அவர்கள் தேர்ச்சி பெற முடிவதில்லை. தனியார் துறையில் இனப் பாகுபாடு சற்று குறைவாக இருக்கிறது. அப்படி இருந்தும் இனப் பாகுபாடு நீடிக்கவே செய்கின்றது என்று அவர் சொன்னார்.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சில சாதகமாக சுழ்நிலையில் தங்கள் துறைகளில் முன்னேறி இருக்கின்றனர். ஆனால் இந்திய சமூகத்தில் பெரும்பகுதியினர் இன்னும் வேலை செய்து வருமானம் ஈட்டக்கூடியவர்களாகத்தான் இருக்கின்றனர் .

போதுமான ஆற்றல் இல்லை அல்லது பரந்த தொடர்புகள் இல்லை என்பதற்காக அவர்களால் முன்னேற முடியவில்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் இனப்பாகுபாடு அவர்களுக்குப் பெரிய இடையூறாக உள்ளது என்று அவர் தனது முகநூலில் கூறினார்.

இந்திய சமூகத்தில் சீமார் 65 விழுக்காட்டினர் காலத்திற்கு ஒவ்வாத ஆற்றலைப் பெற்றுள்ளனர் எனவும் அவர்கள் தொழில் திறன் கல்வித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் சன்வே பல்கலைக்கழகத்தின் மகேந்திரன் எஸ். நாயர் கூறியிருப்பது குறித்து இராமசாமி கருத்துரைத்தார்.

தொழில் ஆற்றல், கலந்தாலோசனைத் திட்டங்கள் மிக முக்கியம் எனவும் இந்திய சமூகத்தினர் அதில் இணைய வேண்டும் எனவும் மகேந்திரன் கூறியிருந்தார்.

அடிமட்ட ரீதியில் உண்மையான நிலவரத்தைப் பிரதிபலிக்காத மிக எளிமையான கூறுகளுக்கு அப்பால் இந்திய சமூகத்தின் பொருளாதார நிலை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரமும் அரசியல் நடைமுறைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சாதகமாக அமையும் பட்சத்தில் போதுமான தொழில் ஆற்றல் அல்லது தொடர்புகள் இல்லாத காரணத்தினால் இந்திய சமூகத்தின் வாய்ப்புகளைத் தவற விட்டு விடுகிறார்கள் என்று சொல்வது அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக நீடிக்கும் இனப் பாகுபாடு இந்த நாட்டில் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையையும் சுய கௌரவத்தையும் குறைத்திருக்கிறது.

அரசுத் துறையில் வேலை வாய்ப்பைப் பெற பலர் விரும்புவதும் இல்லை. ஏனெனில் அரசு சேவைத்துறையில் வேலை கிடைக்காது என்பதும் நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைக்கப்பட மாட்டோம் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

குறைந்த வருமானம் பெறக்கூடிய ஒரு வளையத்தில் இருந்து வெளியே வர வேண்டுமானால் தொழில் ஆற்றலும் மறு தொழில் ஆற்றலும் முக்கியம்தான்.

ஆனால் இனப் பாகுபாட்டின் தடைகளை நீங்கள் எப்படி அகற்றப் போகிறீர்கள் என்று இராமசாமி கேள்வியை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here