பெட்டாலிங் ஜெயா, (ஜூலை 1):
வழிபாட்டு நடவடிக்கைகளுக்கான புதிய நிலையான இயக்க நடைமுறை (SOP) அடிப்படையில் அனைத்து மசூதிகள் மற்றும் சூராக்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் கட்டாய பிரார்த்தனைகளுக்கு பகாங் அனுமதி வழங்கியுள்ளதாக பஹாங் இஸ்லாமிய சமயத்துறை (JAIP) இயக்குநர் சுல்கிஃப்ளி அலி தெரிவித்தார்.
புதிய எஸ்.ஓ.பியின் அடிப்படையில், நடமாட்ட கட்டுப்பாட்டு ஒழுங்கு (PKP) மற்றும் இறுக்கமான இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கு (PKPD) காலங்களில் மொத்தம் 100 வழிபாட்டாளர்களைக் கொண்டு மாநில மசூதிகள் மற்றும் மாவட்ட மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“கட்டாய பிரார்த்தனைகளுக்கு, மாநில மசூதிகள், மாவட்ட மசூதிகள், பாரிஷ் மசூதிகள், சூறாக்கள் ஆகியவற்றில் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா மற்றும் பகாங் இடைக்கால ராஜா துங்கு அஸ்லான் இப்ராஹிம் சுல்தான் அப்துல்லா ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் சுல்கிஃப்ளி கூறினார்.
மேலும் PKPD பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்குகொள்ள 12 பேர் அனுமதிக்கப்படுகிறனர் என்றும் கூறினார்.
மலேசியர் அல்லாத குடிமக்கள், பாரிஷியர்கள் அல்லாதவர்கள், கோவிட் -19 தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பஹாங்கிற்கு வெளியே இருந்து வரும் இமாம்கள் போன்றோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இது தவிர, 12 வயதிற்குட்பட்ட தொழுகையாளர்களுக்கும் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மசூதிகள் மற்றும் சூராக்களின் நிர்வாகம் வெள்ளிக்கிழமை மற்றும் கட்டாய பிரார்த்தனைகளுக்கான வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் நிர்வாகங்கள் அது தொடர்பாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனறும் அவர் கூறினார்.