20 ஆண்டுகளுக்கு பிறகு.. ஆப்கானிஸ்தான் பாக்ராம் விமானப்படை தளத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்

காபூல்: அமெரிக்க படைகளுக்கு மையமாக விளங்கிய ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா நியூயார்க் நகரின் இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பயங்கரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர். இதில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்ட தனது படைகளை அங்கு குவித்தது

வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ – NATO) தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் குவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட நெடிய போர் நடந்தது. ஆப்கானிஸ்தானில் மட்டும் 2,488 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஜோ பைடன் உத்தரவு இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அமெரிக்க படைகளும், நேட்டோ படைகளும் அங்கு இருந்து திரும்பி வருகின்றன. 2020 பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், நேட்டோ கூட்டணியும் 2021 மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன.

வெளியேற சம்மதம் அல் கொய்தாவோ, பிற தீவிரவாத அமைப்புகளோ தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட தலீபான்கள் அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தலீபான்கள் பங்கெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் அமெரிக்க படைகள் அங்கு இருந்து வெளியேற சம்மதம் தெரிவித்தது.

பாக்ராம் விமானப்படை தளம் இந்த நிலையில் அமெரிக்க படைகளுக்கு மையமாக விளங்கிய ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினரிடம் பாக்ராம் விமானப்படை தளம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினார்கள்.

அமெரிக்க படைகளின் உயிர்நாடி பாக்ராம் விமானப்படை தளம் அமெரிக்காவுக்கு சுமார் 20 ஆண்டுகளாக பிரதானமாக விளங்கியது. மேலும் தலீபான் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடும் மையமாகவும் பாக்ராம் விமானப்படை தளம் திகழ்ந்தது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க படையினர் பலர் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here