தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய.. இந்திய கிராமங்கள்

 எச்சரித்தது சீனா ?

டெல்லி:

தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய இந்திய – சீன எல்லையில் அமைந்த கிராமங்களில் சீன ராணுவம் பேனர் காட்டி எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்த மதத்தின் தலைவராக அறியப்படுபவர் தலாய் லாமா. இவரது பிறந்த நாள் கடந்த ஜூலை 6ஆம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

அதேபோல லடாக் பகுதியில் இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள சில கிராமங்களிலும் தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

சீன ராணுவம்

அப்போது சீன எல்லையில் வந்த ராணுவத்தினர் பேனர் ஒன்றில் எதையோ எழுதி கிராம மக்களுக்குக் காட்டியுள்ளனர். மொத்தம் ஐந்து வாகனத்தில் சீன ராணுவத்தினர் வந்ததாகவும் கிராமத்தில் சிந்து நதி அருகே கிராமத்திற்கு வெறும் 200 மீட்டர் தொலைவில் அவர்கள் பேனரைப் பிடித்துக் கொண்டு நின்றதாகவும் கிராம தலைவர் தெரிவித்தார்.

சீன மொழி

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “சீன மொழி எங்களுக்குத் தெரியாது. இதனால் அவர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், பேனருடன் சுமார் 30 நிமிடங்கள் வரை அவர்கள் அப்படியே நின்று கொண்டிருந்தனர்” என்று அவர் கூறினார். பொதுவாகவே எல்லையில் ஒரு தரப்பு ராணுவம் மற்றொரு தரப்பினருக்கு எதேனும் ஒரு செய்தியை தொடர்பு கொள்ள வேண்டும் வேண்டும் என்றால், அதற்கு இதுபோல பேனரை வைத்தே தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமரான பிறகு முதல்முறையாக தலாய் லாமாவுக்கு இந்தாண்டு தான் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். திபெத் பகுதியில் பிறந்த தலாய் லாமா, திபெத் சீனாவுடையது இல்லை, தனி நாடு என்ற கோரிக்கையை ஆதரிக்கிறார்.

முதல்முறை இல்லை

இதனால் தலாய் லாமாவை கொண்டாடுபவர்களைச் சீனா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டும் தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய கிராமத்தை சீன எல்லையில் இருந்த சிலர் எச்சரித்திருந்தனர். அப்போது அவர்கள், “திபெத்தை பிரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும்” என்ற பேனரை அவர்கள் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here