கோத்தா பாரு:
சுங்கை கோலோக் சட்டவிரோத எல்லை வழியே மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டினரை பேருந்து நிலையத்திற்கு ஏற்றிச் செல்ல RM10 கட்டணம் வசூலித்து வந்த உள்ளூர் தொழிலாளி ஒருவரைப் பொதுப்படைப் பிரிவினர் (GOF) கைது செய்துள்ளனர்.
கிளந்தான், பசீர் மாஸ் பகுதியில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் வரிவிலக்கு வளாகத்தின் கேட் 1 அருகே, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஒப்ஸ் தாரிங் வாவசான்’ ரோந்து நடவடிக்கையின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டதில், உள்ளூர் தொழிலாளி ஒருவரும், முறையான நுழைவு அனுமதி ஆவணங்கள் இல்லாத இந்தோனேசிய நபர் ஒருவரும் பிடிபட்டனர்.
தாய்லாந்தின் ஹாட் யாய் விமான நிலையம் வழியாக வந்து, சுங்கை கோலோக் சட்டவிரோத படகுத்துறை மூலம் மலேசியாவுக்குள் ஊடுருவிய அந்த இந்தோனேசிய நபர், கோலாலம்பூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
சுமார் RM4,000 மதிப்புள்ள டெமாக் (Demak) மோட்டார் சைக்கிள், 2 கைபேசிகள் மற்றும் ஒரு கடவுச்சீட்டு உட்பட மொத்தம் RM6,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்கிழக்கு மண்டல GOF தளபதி SAC அகமத் ராட்ஸி ஹுசேன் தெரிவிக்கையில், பிடிபட்ட இரு நபர்களும் மேல் விசாரணைக்காகப் பசீர் மாஸ் மாவட்டக் காவல் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 2007-ஆம் ஆண்டின் மனிதக் கடத்தல் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ATIPSOM) பிரிவு 26J-ன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.























