பறவைகளின் தாகத்தைப் போக்க சாலைகளில் தண்ணீர் வசதி

ஐக்கிய அமீரகத்தில் ஓர் அசத்தல் முயற்சி!

உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டிவருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால், மக்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுவருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வாயில்லா ஜீவன்கள் பல வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் இல்லாமலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் அவ்வாறு தண்ணீரின்றி தவிக்கும் பறவைகளைக் காக்க, துபாயின் ஷார்ஜாவில் உள்ள ஒரு பகுதியில், கோடைக் காலத்தையொட்டி அரசும், அப்பகுதி மக்களும், பறவைகளுக்குத் தாகம் தீர்க்க உதவும் வகையில், தண்ணீர் கேன்கள் வைத்துள்ள செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. ஏழாவது ஆண்டாக இந்த சேவை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமீரகத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவும் நிலையில் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு உதவிடும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் இந்த தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டுள்ளன.

டிப்பா அல் ஹிசன் நகராட்சி, டிப்பா அல் ஹிசன் நகர கவுன்சில், டிப்பா அல் ஹிசன் காவல் நிலையம் உள்ளிட்ட அரசுத்துறைகள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இதனையொட்டி நகரின் முக்கியமான நூறு இடங்களில் இந்த தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கேன்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை அங்கு வரும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் குடித்து தங்களது தாகத்தை தீர்த்து வருகின்றன.

அரசுத்துறைகள் மட்டுமல்லாது இந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் தங்களது பங்களிப்பாக தங்களது வீடுகளின் அருகில் பறவைகளுக்காக தண்ணீரை வைத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதிகமான வெப்பநிலையின் காரணமாக தாகம் ஏற்பட்டு பறவைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்த பணியானது சிறப்பாக நடந்து வருகிறது.

இது குறித்துப் பேசிய டிப்பா அல் ஹிசன் நகராட்சியின் தலைவர் தலிப் அப்துல்லா அல் யஹ்யை, “ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் சமூக பொறுப்புணர்வின் அடிப்படையிலும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த பணி நடக்கிறது.

பறவைகளுக்கு வைக்கப்படும் தண்ணீர் கேன்கள்

ஐக்கிய அமீரக தலைவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. மறைந்த அமீரக அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டலில் இத்தகைய அறப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த 2015- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here