270,000 பணமோசடி செய்ததாக ஒரு பெண் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு; மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சிரம்பான், ஜூலை 16:

தமது வங்கிக் கணக்குகளில் தொலைபேசி மோசடியில் இருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியாக இருந்த 270,000 வெள்ளியை நேர்மையற்ற முறையில் மறைத்து வைத்தது உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் மீது சிரம்பான் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

முகமட் அனஸ் முகமட் அமீர் நஷாருடின்(21) ,சுலைகா ரோஸ்லான்(22) மற்றும் முகமட் ஷாஃபிருல் ஹைடெஸ்மேன் (31)ஆகியோர் மீது இம்மோசடிக் குற்றச்சாட்டு நீதிபதி நோர்சலிசா டெஸ்மின் முன்னிலையில் படித்தபோது ,குற்றச்சாட்டுகளை அம்மூவரும் ஏற்றுக் கொண்டனர்.

இவர்கள் மூவருக்கும் தண்டனைச் சட்டத்தின் 424 வது பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.

முகமட் அனஸ் தனது கணக்கில் 130,000 வெள்ளியை மறைத்து வைத்தது உட்பட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. ஜூலை 7 மற்றும் 9 தேதிக்கு இடையில் நீலாயில் உள்ள ஒரு வங்கியில் இக் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த பணம் 57 வயதான முகமட் ரோஸ்லான் அப்த் மனாப் என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து நீதிபதி நோர்சலிசா அவருக்கு மொத்தமாக 34,000 வெள்ளி அபராதம் விதித்தார். இதனை செலுத்த தவறினால் அக்குற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 முதல் 12 மாதங்கள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அபராதம் செலுத்த முடியாது என்று குற்றம் சாட்டப்பட்ட முகமட் அனஸ் நீதிமன்றத்தில் கூறியபோது, ​​சிரம்பான் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவிக்க அவரை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்து சுலைக்கா தனது வங்கிக் கணக்கில் மொத்தம் 60,000 வெள்ளியை வைத்திருந்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. குறித்த பணம் முகமட் ரோஸ்லான் என்பவருக்கு சொந்தமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ் சாட்டப்பட்ட சுலைக்காவும் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் நீலாயில் உள்ள ஒரு வங்கியில் இக் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றங்களுக்காகவும் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 16,000 வெள்ளி அபராதம் விதித்தது.

அந்த பெண்ணும் அபராதத்தை செலுத்த முடியாததால், அவரது சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கு மலாக்காவில் உள்ள சுங்கை ஊடங் சிறைக்கு அனுப்புமாறு நீதிபதி நோர்சலிசா உத்தரவிட்டார்.

இறுதியாக முகமட் ஷஃபிருல் தனது வங்கிக் கணக்கில் 80,000 வெள்ளியை நேர்மையற்ற முறையில் மறைத்தது உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இப்பணமும் வேறு ஒரு நபருக்கு சொந்தமானதேயாகும்.

இவரும் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நீலாயில் உள்ள ஒரு வங்கியில் அவர் குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒவ்வொரு குற்றத்திற்குமாக நீதிபதி நோர்சலிசா அவருக்கு மொத்தமாக 24,000 வெள்ளி அபராதம் அல்லது 10 முதல் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்தார்.

இவரும் அபராதத்தை செலுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அவரையும் அவரது சிறைத்தண்டனையை நிறைவேற்ற சிரம்பான் சிறைக்கு அனுப்புமாறும் நீதிபதி  உத்தரவிட்டார்.

இத்தண்டனை குறித்து கருத்துரைத்த மாநில வணிக குற்ற புலனாய்வுத் துறைத் தலைவர் ஐ பி அப்கானி, சிறைத்தண்டனையை தொடர்ச்சியாக அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்றார்.

அதாவது முகமட் அனஸ் 44 மாதங்களும், முகமட் சியாபிருல், 32 மாதங்களும், சுலைக்கா ரோஸ்லான், 20 மாதங்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதாகும்.

தொலைபேசி மோசடியில் 414,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தெரிவித்ததையடுத்து, இந்த மூன்று பேரும் பினாங்கில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here