பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்:

 நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புமா?

பத்திரிகையாளர்களை வேவு பார்த்த விவகாரம் புயலை கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இந்திய கம்யூ. பினாய் விஸ்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெகாசஸ் என்ற ஹேக்கிங் மென்பொருள் மூலம் 40 இந்திய பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக தி வயர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டது. இந்த ஹேக்கிங் மென்பொருளை என்எஸ்ஒ என்ற இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்து வேவு பார்ப்பதற்காக பல்வேறு அரசுகளுக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

பத்திரைகையாளர்களின் செல்லிடப்பேசிகளை தடயவியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்கள் வேவு பார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து, இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், நெட்வொர்க் 18 உள்ளிட்ட நாட்டின் பாரம்பரிய செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்த பத்திரைகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், காஷ்மீர் குறித்த செய்திகளை வெளியிட்டவர்கள் ஆவர்.

தி வயர் செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன், எம். கே வேணு ஆகியோரும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் செய்தி நிறுவனமான பார்பிட்டன் ஸ்டோரீஸ், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அரசு சாரா அமைப்புக்கு தான் வேவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உலகின் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு இதுகுறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்ற பத்திரிகையாளர்களின் செல்லிடப்பேசி வேவு பார்க்கப்பட்டது மட்டுமல்லாமல் தீவிரமாக கண்காணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் புயலை கிளப்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற மற்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இதுகுறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினாய் விஸ்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மின்னணு, தகவல் தொடர்பு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்களை அரசு கண்காணித்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களோ உண்மையோ இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வாட்ஸ்அப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் வேவு பார்த்ததாக முந்தைய காலத்திலும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனமே உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானோர் மோடி, அமைச்சர்கள் குறித்து புலனாய்வு கட்டுரைகளை வெளியிட்டவர்கள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here