நேபாளத்தில் தொடரும் சோகம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900 ஆக உயர்வு; திபெத், நேபாளத்தில் மீட்கப்பட்ட 77 மலேசியர்கள் நாடு திரும்புகின்றனர்; 55 பேரைக் காணவில்லை!

கோலாலம்பூர்:

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிப் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 77 மலேசியர்கள், நாடு திரும்புவதற்காக காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இருப்பினும், மேலும் 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அரசாங்கப் பேச்சாளர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இத்தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இது குறித்து அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறிய ஃபஹ்மி ஃபட்சில், “பாதுகாப்பாக மீட்கப்பட்ட 77 மலேசியர்களும் விரைவில் தாய்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் காத்மாண்டுவில் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய 55 மலேசியர்களைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.

நேபாளத்தின் மனிதநேயப் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை அமைச்சரவை உறுதிப்படுத்தியது.

மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் (SAR) உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக மலேசியாவின் சிறப்புப் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவை (SMART) நேபாளத்திற்கு அனுப்பவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பாறைச் சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திங்கட்கிழமை நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதுடன், மாயமானவர்களின் எண்ணிக்கை 4,500-ஐ நெருங்கியுள்ளது.

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தொடர்பில்லாத வெளிநாட்டுப் பயணிகளின் பட்டியலில் மலேசியர்களுடன் இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here