பூச்சோங்கில் SOP விதியை மீறிய மருந்தகத்திற்கு அபராதம்; மருந்தக ஊழியர்கள் நால்வருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19:

பூச்சோங்கில் உள்ள ஓர் மருந்தகத்தில் கோவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அரசினால் இளஞ்சிவப்பு பட்டியிடப்பட்ட (வளையல்) மூவரின் அத்துமீறிய செயலால் அம்மருந்தகத்தின் நான்கு ஊழியர்களுக்கு போலீஸ் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவிட்டதுடன் அம் மருந்தகத்திற்கும் அபராதமும் விதித்தது.

சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் அப்துல் காலிட் ஓத்மானின் அறிக்கையின்படி, இளஞ்சிவப்பு நிறப் பட்டி (வளையல்) அணிந்திருந்த அந்த மூவரும் மருந்தகத்தின் முன் காணப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களில் ஒருவர் மைசெஜதெரா விண்ணப்பத்தை ஸ்கேன் செய்யாமல் மருந்தகத்தில் நுழைந்தார் என்று கூறினார்.

மேலும் அம் மருந்தகத்தின் மேற்பார்வையாளரின் கூற்றுப்படி, ஜூலை 15 நடந்த சம்பவத்தில், ஸ்கான் செய்யாமல் உள்ளே நுழைந்த அந்த நபர் மருந்தகத்தின் ஊழியரால் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னர், எந்த பொருளும் வாங்காமல் வெளியேறினார் என்றும் தெரியவருகின்றது.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, மைசெஜதெராவை ஸ்கான் செய்து “ஆபத்து குறைந்த” வாடிக்கையாளர்கள் மட்டுமே வளாகத்திற்குள் நுழைவதை உறுதி செய்யத் தவறியதற்காக காவல்துறையினர் மருந்தகத்திற்கு எதிராக அபராதம் விதித்தனர்.

மேலும் “அன்றைய தினம் கடமையில் இருந்த நான்கு மருந்தகத் தொழிலாளர்கள் ஆரம்ப கட்ட சோதனையைச் செய்ய அறிவுறுத்தப்படுவதற்கு முன்னர், தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டனர்” என்றும் காலிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த மருந்தகத்தின் முன்னால் காணப்பட்ட அந்த மூன்று நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இப்போது வரை தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு மருந்தகத்தின் முன் கையில் இளஞ்சிவப்பு பட்டி (வளையல்கள்) அணிந்திருந்த ஒரு பெண்ணும் 2 ஆண்களும் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ஜூலை 16 அன்று வைரலானதை தொடர்ந்தே இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 270 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இது உயிருக்கு ஆபத்தான நோயைப் பரப்பக்கூடிய ஒரு தீய செயல் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 22 (பி) யின் கீழும் முன்னெடுக்கப்படுகின்றது.

“சுய-கட்டுப்பாட்டு உத்தரவுக்கு அறிவுறுத்தப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைத்துள்ள SOP களுக்கு அமைவாக தொடர்ந்தும் இணங்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது” என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-எஃப்.எம்.ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here