சிங்கப்பூரின் ஓர் உயர்நிலைப்பள்ளியில் 13 வயது மாணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது மாணவன் கைது.

சிங்கப்பூர், ஜூலை 20:

ரிவர் வேலி உயர்நிலை பள்ளியில் (River Valley High School) 13 வயது சிறுவன் ஒருவரை கோடாரியால் கொல்லப்பட்டது தொடர்பில் 16 வயது மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜூலை 19ஆம் தேதி காலை 11.40 மணியளவில், 6 பூன் லே அவென்யூவில் உள்ள அந்தப் பள்ளியிடமிருந்து போலீசாருக்கு உதவிக்கான அழைப்பு வந்தது. பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள், தாக்கப்பட்ட 13 வயது மாணவர் கழிவறையில் பலத்த காயங்களுடன் அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக போலீசர் கண்டறிந்தனர். மேலும் உயிரிழந்த மாணவருக்கும் அவரைத் தாக்கிய மாணவருக்கும் இடையே சம்பவத்திற்கு முன்னர் எந்த முன்பழக்கமும் இல்லை என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டதாக நம்பப்படும் ஒரு கோடரியையும் கைப்பற்றியுள்ளது.

இன்று (ஜூலை 20) நீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய அந்த மாணவன் மீது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் அத்துடன் அவருக்கு மனநல பரிசோதனையும் செய்யப்படும் என்று போலீஸ்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சந்தேக நபரை மனநல கண்காணிப்பிற்காக ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை போலீஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

முறையான விசாரணையின்மூலம், முழு விவரங்கள் வெளியாகும் வரையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், மரணமுற்ற மாணவனின் குடும்பத்தினரின் உணர்வுகளை மதித்து நடக்கும்படியும் போலீசார் இந்நேரத்தில் பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here