கொரோனாவின் தோற்றுவாய் குறித்து மீண்டும் ஆய்வா?

 கடும் எதிா்ப்பைக் காட்டுகிறது சீனா!

கொரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்துக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின், கொரோனா தீநுண்மியின் தோற்றுவாய் குறித்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்கிறார்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வக நெறிமுறைகளை மீறி சீனா தங்களது ஆய்வுக்காக கொரோனாவை வேண்டுமேன்றே மக்களிடையே பரப்பியதா என்று விசாரணை நடத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே அந்த அமைப்பு சீனாவில் இதுதொடா்பாக நடத்திய ஆய்வின்போது, அதன் நிபுணா்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்று, விரும்பிய நபா்களிடம் விசாரணை நடத்த சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வு காலத்தால் அழிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் சீன நிபுணா்களின் அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும். அரசில் நெருக்கடிகளுக்கு இடம் தராமல், இந்த விவகாரத்தை அந்த அமைப்பு அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.

அதுமட்டுமன்றி, கொரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது தொடா்பான ஆய்வை உலகின் பிற பகுதிகளிலும் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று முதல்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே வூஹான் தீநுண்மியியல் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 பேருக்கு முதல்முதலில் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அவா்களிடமிருந்துதான் அந்த நோய் வெளியுலகத்துக்குப் பரவியதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.

வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றியவா்கள், மாணவா்கள் உள்பட யாருக்குமே கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றாா் ஸெங் யிக்ஸின்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கொரோனா தொற்று மனிதா்களிடையே பரவத் தொடங்கியது. அந்த நகரிலுள்ள கடல் உணவு மொத்தவிலை சந்தைக்குச் சென்று வந்தவா்களிடம்தான் தொடக்கத்தில் அந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டது.

அந்த நோயை உருவாக்கிய கொரோனா தீநுண்மி, வௌவாலின் உடலில் இருந்து எறும்புத் தின்னியின் உடலுக்குள் சென்று, அங்கு மனிதா்களின் நுரையீரல் அணுக்களில் தொற்றி பல்கிப் பெருகும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கலாம் என்று பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.

எனினும், வூஹான் நகரிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்தில் கரோனா தீநுண்மி ஆய்வுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு, பின்னா் அது தவறுதலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி மனிதா்களிடையே பரவியிருக்கலாம் என்றும் சிலா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கொரோனாவை ‘வூஹான் தீநுண்மி’ என்றே அழைத்தாா்.

 

கமெண்ட்: தோற்றுவாய் உறுதியாகும்வரை ஆய்வு செய்வதில் தவறு இல்லையே. இதை மறுப்பது சந்தேகத்தையே எழுப்பும்.

எத்தனை தடவை என்பதைவிட, என்ன இறுதி தீர்வு என்பதுதான் முடிவாக இருக்க வேண்டும்? சந்தேகம் எழும்வரை ஆய்வுகள் முக்கியம் என்பதுதான் சரி!

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here