ஜோகூர் பாரு, ஜூலை 24 :
கோத்தா திங்கி அருகே வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 140 குடும்பங்கள் பலத்த மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஏழு கிராமங்கள் கம்போங் ஸ்ரீ காடிங், கம்போங் தெலுக் ஜெரி, கம்போங் தெலுக் ஜெரி லுவார், கம்போங் தெலுக் ஜெரி தாலம், கம்போங் தனா புதி, தாமான் செடிலி மற்றும் கம்போங் செடிலி பெசார் என்பவை அடங்கும் .
மாலை 4 மணி முதல் 5.20 மணி வரை ஏற்பட்ட புயல் பல வீடுகளை, குறிப்பாக கூரைகள் மற்றும் கார் நிறுத்தத்தின் கொட்டகைகளை நாசமாக்கியதாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைவர் ஹுசைன் ஜமோரா தெரிவித்தார்.
“செடிலி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள போலீஸ் தங்கும் விடுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளது” என்று அவர் வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
செக்கோலா கெபாங்சான் ஸ்ரீ செத்தியா ஜெயா மற்றும் செக்கோலா கெபாங்சான் செடிலி பெசார் ஆகிய இரண்டு பள்ளிகளிலும் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காயங்கள் அல்லது இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சேதத்திற்கான செலவு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹுசைன் கூறினார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக தஞ்சோங் செடிலி மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) அலுவலகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் கடல்சார் அமலாக்க இயக்குநர் நூருல் ஹிசாம் சகாரியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அருகிலுள்ள கப்பல்துறையில் பழுதுபார்க்கப்பட்ட MMEAயின் ஒரு ரோந்து படகும், உலோக மற்றும் கூரை ஓடுகள் விழுந்து சேதமடைந்தது என்றும் எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இப்பகுதியில் MMEA நடவடிக்கைகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
– பெர்னாமா









