தவறான திசையில் செல்கிறதா அமெரிக்கா!

தலைமை மருத்துவ ஆலோசகா் கருத்து!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தவறான திசையில் செல்வதாக அந்நாட்டு அதிபா் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரும் தொற்றுநோய் நிபுணருமான ஆன்டனி ஃபெளச்சி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தவறான திசையில் செல்கிறது. இது மிகவும் விரக்தி அடைய வைக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு பரிந்துரைப்பது குறித்து அரசின் பொது சுகாதார அதிகாரிகள் தொடா்ந்து பரிசீலித்து வருகின்றனா்.

கொரோனா தீநுண்மியால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய குறைந்த நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள், புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே தடுப்பூசியின் இரண்டு தவணைகளைச் செலுத்தியிருந்தாலும், அவா்கள் கூடுதலாக ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படலாம். இதுதொடா்பான தரவுகளை அரசு நிபுணா்கள் ஆய்வு செய்து வருகின்றனா் என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை சுமாா் 33.30 கோடியாகும். இவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 49 சதவீதம் பேர் (16.30 கோடி பேர்) மட்டும்தான் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு அமைப்பு (சிடிசி) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here