கோத்தா கினபாலு, ஆகஸ்டு 1:
பெனாம்பாங்கில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) அதிகாலை நான்கு கோவிட் -19 தொற்றுக்குள்ளான கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்கள் முகமட் ரஹ்மான் பசீர்(24); அரிபியன் அப்துல்(27); முகமது தியாஸ்மிர் ரசிப் ருடியாஸ்(20); மற்றும் சல்மான் அரிப்(19); என்ற நால்வரும் ஆவார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் போலீஸ் அதிகாரிகள் சுற்றுக்காவலின் போது குறித்த நால்வரும் அவர்களது படுக்கையில் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் கோவிட்-19 தொற்றுக்குள்ளானதால் ஜூலை 24 முதல் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பெனாம்பாங் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் முகமட் ஹாரிஸ் இப்ராஹிம் கூறினார்.
தப்பியோடியவர்களுள்”அர்ரிபியன் தவிர மற்ற அனைவரும் ஆவணமற்றவர்கள்” என்று DSP ஹாரிஸ் கூறினார்.
கைதிகளுக்கு தங்கள் படுக்கைகளில் கைவிலங்கு போடப்பட்டிருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் கைவிலங்குகளின் பூட்டுகளைத் திறந்து கொண்டு தப்பிவிட்டனர்.
“அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அல்லது அவர்களைப் பார்த்தவர்கள் உடனடியாக 088-723961 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றும் DSP ஹாரிஸ் கூறினார்.
இவ்வாறு தப்பியோடியவர்களை பார்த்தால் பொதுமக்கள் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம் என்றும் ஆனால் அவர்களை பார்த்தால் உடனடியாக போலீஸ் அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.
இந்த நால்வரும் காணாமல் போனதின் பின்னர் தப்பி ஓடியவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.