மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதன் பின்னர் சில இடங்களில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். அதன் பின்னர் சில இடங்களில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏற்கனவே ஜியாங்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஹூனா மாகாணத்தில் கொரோனா பரவி இருந்தது.
இதற்கிடையே சீனாவின் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று தலைநகர் பிஜீங்குக்கும், 5 மாகாணங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. வுகான் நகருக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் நோய் தொற்று பரவுவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நான்ஜிங் விமான நிலையத்தில் கடந்த 20- ஆம் தேதி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.
ரஷியாவில் இருந்து நான்ஜிங் நகருக்கு வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் ஒருவருக்கு தொற்று முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நான்ஜிங் நகரில் இருந்து வரும் விமானங்கள் அனைத்து ஆகஸ்டு 11- ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நகரில் வசிக்கும் 90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சீனாவின் புஜியான் மற்றும் சொங்கிங் நகராட்சி ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அங்கு புதிதாக 55 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
சீனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் பிஜீங் மற்றும் 5 மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள்.