அக்கறை காட்டுங்கள் பெற்றோர்களே!
பொது அறிவைப் பெறுவது, பகுத்தறிவை வளர்ப்பது, ஒருவரை அறிவுபூர்வமாக மாற்றுவது எல்லாம்தான் கல்வி. கல்வியே, சிறந்த குடிமகனை உருவாக்கும், நல்லது – கெட்டதுக்கு இடையேயான வேறுபாட்டை அறிய உதவும். சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்கவும், உரிமைகளையும் கடமைகளையும் சட்டங்களையும் அறிந்துகொள்ளவும் கல்வி உதவுகிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, கரோனாவால் சிதைந்துபோன பல அடிப்படை விஷயங்களில் கல்வியும் ஒன்றென்றாகிவிட்டது. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டிருக்கும் பள்ளி வாழ்க்கை, தற்போது சிறார்களுக்கு மிகக் கொடுங்கனவாக மாறிப் போயுள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிதாக இருந்தாலும், பிறகு நாள்கள் செல்ல செல்ல சலிப்பையே ஏற்படுத்தியது. முதல் ஆண்டில், படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன என்ற எண்ணமும் மாணவர்களின் மனதில் குடிகொண்டதால், பெரிய அளவில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவ, மாணவியர் கவனம் செலுத்தவில்லை.
ஆசிரியர்களுக்கு ஆன்லைன் செயலிகளும், செல்லிடப்பேசித் தொழில்நுட்பமும் புதிதாக இருந்ததால் கல்வி கற்பிப்பதே பெரிய வித்தையாக இருந்தது. இவற்றெயெல்லாம் தாண்டிதான் ஓராண்டு கல்வி முழுக்கவும் ஆன்லைனிலேயே முடிந்தும் போனது.
அடுத்த கல்வியாண்டும் அதே ஆன்லைன் வகுப்புகளில்தான் தொடங்கியது. ஆனால் இந்த முறை ஆசிரியர்களும் சரி, மாணவ, மாணவியரும் சரி, பல விஷயங்களில் நன்கு கைதேர்ந்துவிட்டனர். ஆன்லைன் மூலம் தேர்வு தொடங்கி, கேள்விகளைக் கேட்பது, புத்தகங்களில் பாடங்களைப் படிக்கச் செய்வது என்று மாணவ, மாணவியரை வகுப்பறையில் வைத்திருப்பது போல ஆசிரியர்கள் சில புதிய யுக்திகளைக் கைக்கொண்டனர்.
இவற்றையெல்லாம் தாண்டி சில பள்ளிகளில், மாணவர்கள் நிச்சயமாக கேமராவை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை மாணாக்கருக்கு ஏற்பட்டது.
ஆனால், இதுதான் கல்வி, இப்படிதான் படித்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஏனோ மாணவர்கள் மத்தியில் வந்ததாகத் தெரியவில்லை.
முதல் ஆண்டைத் தாண்டி தற்போது இரண்டாவது ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம். பெரும்பாலும் இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம்தான் கல்வி என்பது கண்கூடாகத் தெரிந்துவிட்டது. எனவே, மாணவர்கள் இனியும் ஆன்லைன் வகுப்புகளில் மெத்தனத்தைக் காட்டக் கூடாது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். அவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் இந்த கரோனா பேரிடர் காலத்தில் கல்வி கற்பிக்கும் பணியைச் செய்துவருகிறார்கள்.
செல்லிடப்பேசியில் இதுவரை சரியாக புகைப்படம் எடுக்கத் தெரியாத ஆசிரியர்கள்கூட, புதிய புதிய செயலிகளில் பாடம் எடுப்பதும், வீட்டுப்பாடம் கொடுத்து அதைப் பெற்றுத் திருத்தி மதிப்பெண் இடுவதும், ஏராளமான மாணவர்களின் செல்லிடப்பேசி எண்களைப் பதிந்து வைத்து, அவற்றில் பல குழுக்களை உருவாக்கி, வீட்டு வேலைக்கு இடையே பல மணி நேரம் இந்தப் பணியைச் செய்துவருகிறார்கள்.
இப்படி பல சங்கடங்களைத் தாண்டி ஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை, மாணவ, மாணவியர்கள் இன்னமும் அக்கறையுடனும் முனைப்பாகவும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் எல்லாமும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்பதுதான் பெருங்குறையாக இருக்கிறது.
ஆன்லைனில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஏனோதானோவென்று மாணவர்கள் இருந்துவிடுகிறார்கள். அது தவறு. அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் எங்களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. பாடம் கற்பிப்பதுதான் எங்களது பணி. எங்களது பணியை நாங்கள் நன்றாகவே செய்கிறோம். எங்கள் வேலையைச் செய்வதற்கு எங்களுக்கு மாத ஊதியமும் கிடைத்துவிடுகிறது. ஆனால், நாங்கள் கற்பிக்கும் பாடங்களைக் கேட்காமல், அலட்சியமாக இருக்கும் மாணவர்களுக்குத்தான் இழப்பு. இது அவர்களுக்குப் புரிவதில்லை.
பள்ளியில் பெற்றோரை அழைத்துப் பேசும்போது, அவர்கள் எப்போதுமே தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவதில்லை. அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களயும் ஆசிரியர்களிடம் சொல்லிக் கவலையடைகிறார்கள். வருவாய் குறைவான ஏழை எளியோரான சில பெற்றோர், தங்களது நிலையைச் சொல்லி கண்ணீர் விடுகிறார்கள்.
வகுப்பு நேரத்தின்போது சிரித்துக் கும்மாளமிடும் மாணவர்களுக்கு, தங்களது பெற்றோரின் வேதனையும் கவலையும் தெரிவதேயில்லை. படித்து தனது பிள்ளைகள் பெரிய ஆளாகிவிடுவார்கள் என்றுதான் எல்லா பெற்றோர்களுமே நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பிள்ளைகளோ அவர்களது கனவைச் சுக்குநூறாக்குகிறார்கள்.
இன்னுமோர் ஆண்டுகூட ஆன்லைன் வகுப்புகளாகவே தொடரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இனியும் இந்த வகுப்புகளில் மாணவ, மாணவியர் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும்போது நிச்சயம் கவனித்துக் கேட்க வேண்டும். முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டுக் குறித்து வைத்துப் படிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டும்.
முக்கியமாக, தேர்வெழுதும்போது, புத்தகம் கையில் இருந்தால் பார்த்து எழுதுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், சுய கட்டுப்பாட்டுடன் தேர்வுகளை எழுத வேண்டும். பாடம் சொல்லிக் கொடுக்கும் போது கவனிக்காமல் இருப்பதைவிடவும், பார்த்து எழுதிய பள்ளித் தேர்வுத் தாளை திருத்தும்போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இப்படிப் பார்த்துப் பார்த்துத் தேர்வு எழுதி எடுத்த மதிப்பெண்களைப் பார்க்கும் போது எங்களுக்கு ரத்தக் கொதிப்பே வருகிறது. ஒரு மாணவர் எப்படிப் படிப்பார், எப்படித் தேர்வெழுதுவார் என்பது எங்களுக்குத் தெரியாதா? இரு மாணவர்கள் சரியாகப் பதிலெழுதினாலே பெரிய விஷயம் என்று நினைக்கும் ஒரு கடினமான கேள்விக்கு, 50-க்கு 50 மாணவர்களும் சரியாகப் பதிலெழுதுகிறார்கள். இது எப்படி நடந்திருக்கும் என்பது ஆசிரியர்களான எங்களுக்குத் தெரியாதா?
எனவே, தேர்வுக்கு முன்பு படித்து, பள்ளியில் எப்படித் தேர்வெழுதுவீர்களோ அப்படி புத்தகத்தைப் பார்க்காமல் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதிலெழுதுங்கள். இதனால், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், உங்கள் மீதான மதிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரிக்கும். உங்களை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் படித்து உங்களை உயர்த்திக் கொள்ளலாம். புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து எழுதும்போது உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதுகூட உங்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது.
மாணவர்களின் விடைத்தாளைத் திருத்தும்போது எங்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. புத்தகத்தையோ அல்லது கூகுளில் தேடியோ எழுதிய விடைகளை எல்லாம் எங்கள் நேரத்தைச் செலவிட்டு திருத்தும்போது பிள்ளைகள் எங்களது மனநிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
படித்த பிள்ளை, படிக்காத பிள்ளை என எல்லாமே புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும்போது எங்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் பிள்ளைகள் ஏமாற்றுவது எங்களையல்ல. அவர்களைத்தான். அவர்களது எதிர்காலத்தைத்தான் என்பதை நிச்சயம் உணர வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள். அவரவர் எதிர்காலம் அவரவர் கையில். பிள்ளைகள் பார்த்து எழுதாமல், பெற்றோரும் ஆசிரியர்களாக மாறி அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுக்கின்றனர்.