ஹைதி நாட்டில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2,189ஆக உயர்வு

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால், மக்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,189 ஆக அதிகரித்துள்ளது என ஹைதி அரசு தெரிவித்துள்ளது. மேலும், 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 30 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. மேலும், நிலநடுக்கத்தால் 12,268 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here