நடுவானில் பிரசவம்: தப்பித்து வந்த ஆப்கான் பெண்ணுக்கு அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. காபூல் விமான நிலையம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

தாலிபான்கள் இந்த காபூல் விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது. அமெரிக்க படைகளின் உதவியுடன் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்கள் சாரை சாரையாக வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் ஆப்கானிஸ்தானில் வாழ விருப்பம் இன்றி ஆப்கான் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆப்கான் மக்களை தடுப்பதற்காக தாலிபான்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

தாலிபான்கள்

விமானம் நிலையத்தை தவிர மற்ற பகுதிகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பயன்படுத்தி மக்களை விமான நிலையம் செல்ல விடாமல் தாலிபான்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. முக்கியமாக மற்ற மாகாணங்களில் இருந்து காபூல் நோக்கி வரும் மக்களை பல்வேறு செக் போஸ்டுகளில் தாலிபான்கள் தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

நாங்கள் நல்ல ஆட்சி கொடுப்போம், இங்கேயே இருங்கள் என்று கூறி மக்களை தங்கள் மாகாணத்தில் இருந்து வெளியேற விடாமல் தாலிபான்கள் தடுத்து வருகிறார்கள்.

இதையும் மீறி தாலிபான்களின் கண்களில் மண்ணை தூவி பலரும் தங்கள் பகுதிகளில் இருந்து தப்பி காபூல் விமானம் நிலையம் வருகிறார்கள். பின் அங்கிருந்து பல்வேறு நாடுகளில் மீட்பு விமானங்களின் உதவியோடு வெளிநாடுகளில் குடியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மீட்பு விமானம் மூலம் ஜெர்மனி சென்ற பெண்ணுக்கு விமானத்திலேயே குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த சம்பவம் விமானத்தில் இருந்த சக பயணிகளுக்கு இடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் இருக்கும் ராம்ஸ்டெயின் விமானப்படை தளத்திற்கு அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இந்த விமானம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. நடுவானில் விமானம் சென்ற போது அதில் இருந்த ஆப்கான் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விமானம் அப்போது 28 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. இதனால் அவர் மூச்சு விட திணறி உள்ளார்.

மேலே பிரஷர் குறைவாக இருக்கும் என்பதால் அவரால் மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார். அதோடு அவருக்கு வயிறு வலியும் இயல்பை விட அதிகமாக இருந்தது. வலியில் மோசமாக துடித்தவர் விமான பணிப்பெண்களிடம் தன்னை காப்பாற்றும்படி கூறியுள்ளார். இந்த தகவல் உடனே விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பறந்த உயரம் குறைக்கப்பட்டது. அதோடு விமானமும் ஜெர்மனியில் இருக்கும் ராம்ஸ்டெயின் விமானப்படை தளத்தை நெருங்கியது.

இதையடுத்து தரையிறங்கும் முன் விமானம் மேலும் பல அடிகள் உயரம் குறைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் கொஞ்சம் நன்றாக மூச்சு விட்டுள்ளார். அதோடு விமானம் தரையிறங்கும் சில நொடிகளுக்கு முன் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

விமானம் இறங்கியவுடன் அந்த பெண்ணை வெளியே கொண்டு வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தையும், தாயும் பாதுகாப்பாக தரையிறங்கியது சக பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here