கையில் ஆப்கான் குழந்தை… குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட.. அமெரிக்க வீராங்கனையின் கடைசி பதிவு

காபூல்: ஆப்கானில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க பாதுகாப்புப் படை வீராங்கனை நிக்கோல் எல். ஜீ, குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் ஆப்கான் குழந்தை ஒன்றைக் கையில் ஏந்தியபடி பதிவிட்டிருந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்தே ஆப்கான் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கனை தாலிபான்கள் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்டனர்.2 வாரங்கள் ஆன பிறகும் கூட தாலிபான்களால் ஆப்கனில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்கான நடவடிக்கைகளில் ஒருபுறம் தாலிபான்கள் இறங்கியுள்ளன.

ஆப்கானிஸ்தான் அதேநேரம் மறுபுறம் ஆப்கான் நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் அங்கிருக்கும் மக்களை வெளியே அழைத்து வரும் பணிகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. மேலும், தாலிபான் ஆட்சிக்கு அஞ்சி பல நூறு ஆப்கன் மக்களும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தாக்குதல் இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு ஐஎஸ் பிரிவின் கிளை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் அமெரிக்கா பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் அமெரிக்கா மரைன் படை சார்ஜென்ட் நிக்கோல் எல். ஜீ. இந்த தாக்குதலில் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக்கோல் எல். ஜீ பதிவிட்டிருந்த படம் அனைவரையும் கண்கலங்கச் செய்கிறது. ஆப்கன் குழந்தை ஒன்றைக் கையில் வைத்திருப்பது போன்ற படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த 23 வயதான நிக்கோல், “நான் எனது வேலையைக் காதலிக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது தற்போது வைரலாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், வெளியேறும் அமெரிக்க படை வீரர்களிடம் ஆப்கன் மக்கள் தங்கள் குழந்தைகளை கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் நிலை வெறும் சில வாரங்களில் ஆப்கனை தாலிபான்கள் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவார்கள் என யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதனால் தான் பெரும்பாலான நாடுகள் தங்கள் குடிமக்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளில் வேகம் காட்டாமல் இருந்தன. ஆனால், இப்போது ஒட்டுமொத்த நாட்டை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் பல்வேறு நாடுகளும் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் காபூல் நகரில் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் காபூலில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பதாக நம்பகமான இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே, காபூல் விமான நிலையத்தில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றும் பைடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here