”சீனாதான் எங்களின் பாஸ்.. எங்களின் முக்கியமான பங்குதாரர்”..வெளிப்படையாக அறிவித்த தாலிபான்கள்

காபூல்: உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு சீனாதான் எங்களின் பாஸ். சீனா எங்களின் மிக முக்கியமான பங்குதாரர் என்று தாலிபான்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தாலிபான்களுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் தாலிபான்களுக்கு எதிராக நிற்கின்றன.

பாகிஸ்தான்-தாலிபான்கள்

பாகிஸ்தானையும், தாலிபான்களையும் பிரிக்க முடியாது என்பது நாம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். இதேபோல் ரஷ்யா தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக முதல் ஆளாக தாலிபான்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி விட்டது.

சீனா தாலிபான்களுக்கு ஆதரவு கொடுத்து, பாகிஸ்தானுக்கு கைகொடுத்து இந்தியாவை எதிர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று பல்வேறு தகவல்கள் உலா வந்தன.

சீனாவின் வேலை

இந்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக பேசிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி நிக்கி ஹேலி, ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படைத் தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது என்றும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்த முயற்சி செய்கிறது என்றும் பகீர் தகவலை கூறினார். இந்த நிலையில் சீனா எங்களின் மிக முக்கியமான பங்குதாரர் என்று தாலிபான் பயங்கரவாதிகள் வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.

எங்களின் பாஸ்

இது தொடர்பாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:- சீனா எங்களின் மிக முக்கியமான பங்குதாரர். எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை சீனா பிரதிபலிக்கிறது. ஏனெனில் அது நமது நாட்டை முதலீடு செய்து மீண்டும் கட்டமைக்க தயாராக உள்ளது. நாட்டில் பணக்கார செப்பு சுரங்கங்கள் உள்ளன. இவற்றுக்காக சீனர்களுக்கு நன்றி. இந்த சுரங்கங்களை மீண்டும் செயல்பட வைக்கலாம். இதனை நவீனமயமாக்கலாம். இது தவிர கூடுதலாக, உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு சீனாதான் எங்களின் பாஸ்.

சீனா

சீனாவும் பாராட்டியது

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவும் அவர்களை பாராட்டி தள்ளியது. ”ஆப்கானில் தாலிபான்கள் வந்தது முதல் நேர்மறையான தகவலை வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் தாலிபான்கள் மிதமான மற்றும் விவேகமான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள், அனைத்து வகையான பயங்கரவாத சக்திகளையும் எதிர்த்துப் போராடுவார்கள். மற்ற நாடுகளுடன் இணக்கமாக வாழ்வார்கள். அதன் சொந்த மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு மதிப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது” என்று சீனா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here