கோத்தா பாரு: ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் (HRPZII) வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 35 வயதான தாதி ஒருவர் ஜாலான் கோலக்கிராயில் நடந்த விபத்தில் பலியானார்.
வான் நூரிந்தன் ஃபாரஹிடா வான் ஹசன் என்ற தாதியே தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்கு உள்ளானார். இன்று நண்பகல் 2.15 மணியளவில் நடந்த விபத்தின் போது , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் அப்துல் ரஹீம் தாவூத் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் வாகாஃப் சே யே யில் இருந்து கோத்தா பாருவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது என்றார்.
மேலும் “கார் சாலையின் இடது பக்கம் சாய்ந்து, மின்கம்பத்திலும் அதன் அருகில் உள்ள கடையிலும் மோதியது. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட நபர் விபத்துக்குள்ளான காரில் சிக்கினார்” என்று அவர் மேலும் கூறினார்.
போலீஸைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, விபத்துக்குள்ளான காரில் இருந்து பாதிக்கப்பட்டவரை வெளியேற்ற அங்கிருந்த மோட்டார் வண்டி ஓட்டுநர்கள் உதவியதாக ரஹீம் கூறினார்.
இறந்த தாதியின் உடல் யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா மருத்துவமனைக்கு (HUSM) பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த வழக்கை போலீசார் இன்னும் விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இச்சம்பவம் தொடர்பான சாட்சிகள் போலீசை தொடர்பு கொள்ளுமாறும் ரஹீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று கார் மோதிய கடை மூடப்பட்டிருந்ததால் சம்பவம் நடந்த போது கடைக்குள் யாரும் இருக்கவில்லை. இந்த சம்பவத்தால் மாலை 5 மணி வரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.