மருத்துவமனை வார்டு குளியலறையில் மினி கேமரா பொருத்திய குற்றச்சாட்டில் மருத்துவமனை ஊழியர் கைது

கூலிம்: கூலிம் மருத்துவமனையின் ஒரு வார்டின் குளியலறையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மினி கேமரா கடந்த வியாழக்கிழமை (செப்.16) கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டது.

வியாழனன்று மாலை 6.20 மணியளவில், 30 வயதான தாதி ஒருவர் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மின்னணு சாதனத்தை பார்த்தவுடன், போலீஸை தொடர்பு கொண்டார். அவரது புகாரின் அடிப்படையில் மருத்துவமனை சுகாதார பராமரிப்பு உதவியாளராக இருந்த ஒருவரை போலீஸ் கைது செய்தது.

கூலிம் மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சசாலி ஆதாம் கூறுகையில், குளியலறையில் சம்பந்தப்பட்ட தாதிக்கு ஏதோ கீழே விழுந்தது போன்ற சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் அவர் அந்த இடத்தை பரிசோதித்த போது, சுவரில் இணைக்கப்பட்ட டிஷ்யூ பாக்ஸில் மின்னணு உபகரணங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

பின்னர் அந்த தாதி போலீசாரை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் போலீசில் ஒப்படைத்தார் என்றும் அதன் பின்னர் மருத்துவமனை ஊழியரான சந்தேக நபரை வெற்றிகரமாக போலீஸ் கைது செய்தது என்றார்.

35 வயதான சந்தேக நபர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் வார்டுக்கு முன்னால் அதே நாளில் இரவு 7.20 மணிக்கு கைது செய்யப்பட்டார், “என்றும் அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபரிடமிருந்து ஒரு மினி கேமரா தவிர, ஒரு மொபைல்ன்சார்ஜர், ஒரு செல்போன், இரண்டு சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் கேபிளையும் போலீசார் கைப்பற்றினர்.

தொடக்க விசாரணையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதத்தில் இணையம் மூலம் ஒரு மினி கேமரா வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் “சந்தேக நபர் தான் கேமரா கண்டுபிடிக்கப்பட்ட அதே நாளில் மாலை 5 மணிக்கு மினி கேமராவை வைத்ததாக கூறினார். ஆனால் சம்பவம் தொடர்பாக நாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம், “என்று அவர் கூறினார்.

இவ் வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 509 மற்றும் பிரிவு 14 சிறு தவறு சட்டம் 1955 ன் படி விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here