செல்பி மூலம் பிரபலம் – பாதுகாவலர் தோளில் சாய்ந்து உயிரைவிட்ட நடாகாஷி

மனிதர்களை போன்ற இரு கொரில்லாக்களும் செல்பிக்கு போஸ் கொடுத்தது இந்த புகைப்படத்தை பிரபலமடைய செய்தது. பலரும் இதனை பகிரத் தொடங்கியதால் இரு கொரில்லாக்களும் உலகக் புகழ் அடைந்தன.

செல்பி மூலம் உலகப் புகழ்பெற்ற நடாகாஷி கொரில்லா குரங்கு தனது பாதுகாவலரின் தோளில் சாய்ந்தபடி உயிரைவிட்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு நடாகாஷி  மற்றும் மடாபிஷி ஆகிய இரண்டு கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றின் பெற்றோர் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இரு கொரில்லாக்களும் இந்த  உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

கடந்த 2019ம் ஆண்டு, விருங்கா உயிரியல் பூங்காவின் வனத்துறை ஊழியரான மேத்யூ ஷவாமு இந்த இரு கொரில்லாக்களுடன் செல்பி எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  மனிதர்களை போன்ற இரு கொரில்லாக்களும் செல்பிக்கு போஸ் கொடுத்தது இந்த புகைப்படத்தை பிரபலமடைய செய்தது. பலரும் இதனை பகிரத் தொடங்கியதால் இரு கொரில்லாக்களும் உலகக் புகழ் அடைந்தன.

இந்நிலையில், நடாகாஷி மனித கொரில்லா தற்போது உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு  காணப்பட்ட நடாகாஷி, தனது பாதுகாவலர் ஆண்ட்ரே பவுமா தோளில் சாய்ந்தபடி உயிரை விட்டது. நடாகாஷி கொரில்லா உயிரியல் பூங்காவுக்கு வந்ததில் இருந்து அதனை தனது குழந்தையைபோல் பராமரித்து வந்தவர் ஆண்ட்ரே பவுமா. தற்போது அதன் இறப்பால் அவர் சோகமடைந்துள்ளார்.

இது தொடர்பாக பவுமா வெளியிட்ட அறிவிப்பில், “இது போன்ற ஒரு அன்பான உயிரினத்தை பராமரித்ததும் கவனித்ததும் எனது பாக்கியம்,  மனிதர்களுக்கும் பெரிய குரங்குகளுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ளவும், அவற்றை பாதுகாக்க நாம் ஏன் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதயும் அறிய எனக்கு உதவியது நடாகாஷியின் இனிய இயல்பும் புத்திசாலித்தனமும்தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் “ நடாகாஷியை எனது நண்பர் என்று கூறுவதில் பெருமைக்கொள்கிறேன்.  அவளை என் குழந்தைபோன்று நேசிக்கிறேன். அவளின் கலகலப்பான குணம், எப்போது அவளுடன் இருந்தாலும் என் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும்.  அவள் இல்லாதது மிகப்பெரிய இழப்பு” என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here