தங்கள் பராமரிப்பிலிருந்த சகோதரர்கள் இருவரை துன்புறுத்தியதாக தம்பதிகள் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களின் பராமரிப்பில் இருந்த இரண்டு சகோதரர்களை துன்புறுத்தியதாக, இன்று நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்ட ஒரு திருமணமான தம்பதியினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

முதல் குற்றச்சாட்டின்படி, ஆர். கார்த்திக் (32), மற்றும் பி. தர்கா தேவி (24), ஆகியோர் 11 வயது சிறுவனை கரும்பு, துணி மாட்டும் ஹங்கர் மற்றும் ஒரு துடைப்பத்தால் தாக்கியதாகவும், சூடான கத்தியை அந்த சிறுவனின் கையில் வைத்தும், சிகரெட்டுகளால் உடலில் சுட்டும், சிறுவனின் தலையை சுவரில் மோதியும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே தம்பதியினர் ஏழு வயதான இளைய சகோதரனையும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, அவரையும் கரும்பு மற்றும் துடைப்பத்தால் தாக்கியதாகவும், பாதிக்கப்பட்டவரின் கையில் சூடான கத்தியை வைத்ததாகவும், சிறுவனின் உடல் மற்றும் பிறப்புறுப்பு முழுவதும் சிகரெட்டுகளால் சுட்டதாகவும், சூடான நீரை ஊற்றியதாகவும் மற்றும் அச்சிறுவனது தலையை சுவரில் அடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், இஸ்கந்தர் புத்ரியில் உள்ள பண்டார் செலாசா ஜெயாவுக்கு அருகில் உள்ள செலாசா ஜெயா அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இந்த குற்றங்களை செய்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 34 உடன் சேர்த்து, குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை அல்லது 20,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இது வழிசெய்கிறது.

இவ்வழகை நீதிபதி வான் முஹமட் நோரிஷாம் வான் யாகோப் செவிமடுத்தார்.பகுதி நேர சமையல்காரரான கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு முறையே 30,000 வெள்ளி மற்றும் 15,000 வெள்ளி ஆகிய இரண்டு ஜாமீன்களை வழங்கினார்.

மூன்று குழந்தைகளைக் கொண்ட இந்த தம்பதியினர், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் வெளியில் இருக்கும் போது எந்த சாட்சிகளையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 24 ஆம் தேதி நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 6 அன்று, கார்த்திக்கின் தாயார், பி. மரியம்மா (60), மற்றும் அவரது சகோதரி ஆர். தீபா (37), ஆகியோர் மீதும் இதே சகோதரர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவ்விருவரையும் குற்றவாளி அல்ல என்று கூறி குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here