டுவிட்டரில் வைரலான ‘ஹிந்தித் திணிப்பு’ கேஸ்டைக் ; தமிழில் மன்னிப்பு கோரியது இந்தியாவின் பிரபல உணவு விநியோக நிறுவனம்

சென்னை: ‘ஸொமேட்டோவைப் புறக்கணிப்போம்’, ‘ஹிந்தித் திணிப்பு’ ஆகிய முழக்கங்கள் டுவிட்டரில் பரவலாக எதிரொலித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவு விநியோகச் சேவை வழங்கிவரும் ‘ஸொமேட்டோ’  நிறுவனம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது

“எங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்திற்கு எதிரான கருத்தை வாடிக்கையாளரிடம் கூறிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம்,” என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விகாஷ் என்ற ஆடவர், சேவைக் குறைபாடு காரணமாக ‘ஸொமேட்டோ’ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டார். அப்போது, விகாஷிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை முகவர், அவர் பணத்தைத் திரும்பப் பெற முயல்வதாகவும் ஆனால் அதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு, தமிழ்நாட்டில் தொழில் செய்தால் தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்று விகாஷும் சூடாக பதிலளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வேறு வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மாற்றிவிடுவதாகவும் அவரிடம் பேசி பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் அந்த ஊழியர் தெரிவித்துவிட்டார்.

அத்துடன், “இந்தியாவின் தேசிய மொழி இந்தி. எனவே, பொதுவாக எல்லாரும் சிறிதளவேனும் அதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்,” என்றும் அந்த ஊழியர் கூறினாராம்.

அதன்பின், நடந்ததை விளக்கி ‘ஸொமேட்டோ’ நிறுவனத்திற்கு ‘டுவீட்’ செய்த விகாஷ், தமது உரையாடலுக்குச் சான்றாக படங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து, ‘ஸொமேட்டோ’ நிறுவனத்திற்கு எதிராக  டுவிட்டர்வாசிகள் பொங்கியெழுந்துவிட்டனர்.

இதனிடையே, தமிழில் தங்களது செயலியை உருவாக்கி வருவதாக ஸொமேட்டோ தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தைத் தங்களது நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here