தாஜ்மஹால் போல தாய்க்குக் கல்லறை; நெகிழ வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மறைந்த தனது தாய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் எழுப்பியுள்ளது காண்போரை வியப்படையச் செய்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்து வளர்த்தவர் அவரது தயாரா கரீமா பேகம். தாயார் மீது அளவுக்கடந்த அன்பு கொண்டவராக இருந்தார் ரஹ்மான்.

ரஹ்மான் தாயார் கல்லறையில்...

இவரது தாயார் கரீமா பேகம் கடந்த 2022ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த இழப்பு ரஹ்மான் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான், ரஹ்மான் தனது தாயார் நினைவிடத்தை தாஜ்மஹால் போன்றதொரு வடிவமைப்பில் கட்டி எழுப்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் காண்போரை வியப்படையச் செய்துள்ளது.

தனது தாயாரின் நினைவிடத்திற்கு சமீபத்தில் எழுத்தாளர் நாகூர் ரூமியை அழைத்துச் சென்றுள்ளார் ரஹ்மான். அங்கு சென்ற அனுபவத்தை நாகூர் ரூமி பகிர்ந்துள்ளார். ’சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மான் துபாயிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு கொடுத்தார். என் வீடியோ ஒன்றைப் பார்த்ததாகவும், அது அவருக்குப் பிடித்திருந்ததால் என்னையும் பார்க்க விரும்புவதாகவும், சென்னை வந்ததும் தெரிவிப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. இடையில் அவர் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது மறக்காமல் எனக்கு மூன்று ஸ்பெஷல் முன்வரிசை டிக்கட்டுகளை அனுப்பினார்.

ஒரு டிக்கட் 30,000 ரூபாயாம். நானும் போய் வந்தேன். அங்கேயும் அவரைத் தனியாகப் பார்த்து பேசமுடியவில்லை. 26ந் தேதி திடீரென்று அவரது மேனேஜர் ஒருவர் என்னை அழைத்தார். ஜனவரி 27-ம் தேதி காலை கார் அனுப்புவதாகவும், ஏ ஆர் வீட்டுக்கு அவர் அழைத்திருப்பதாகவும் சொன்னார். காலை நான்கு மணிக்கு கார் வருமென்று சொன்னார். அதாவது நான் படுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்பு. வேறுவழியின்றி மூன்று மணிக்கே குளித்துவிட்டுத் தயாரானேன்.

ரஹ்மான் தாயார் கல்லறையில்...

மிகச்சரியாக காலை நான்கு மணிக்குக் கார் வேளச்சேரிக்கு வந்துவிட்டது. அதில் ஏறி அவர் வீட்டுக்குப்போனேன். வீட்டில் யாருமே இல்லை! நிசப்தம். ஒரு இடத்தில் என்னை உட்கார வைத்துவிட்டு, ‘சார் வருவார்’ என்று சொல்லிவிட்டு வந்தவர் போய்விட்டார். கொஞ்ச நேரம் ஃபோனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய? ஒரு ஐந்து மணி வாக்கில் ரஹ்மான் வந்தார். வந்தவுடன் சலாம் சொன்னார். பின் தொழப்போகலாமா என்றார். நானும் அவரும் இன்னொரு கேரளாக்காரரும் மாடிக்குச் சென்றோம்.

அங்கே தொழுகைக்காகவே ஓரிடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அழகான விரிப்பு, ஆந்திராவில் உள்ள ஏதோ தர்காவின் படம், ஒரு முஸ்லிம் ஞானியின் வரைபடம் எல்லாம் இருந்தன. என்னை இமாமத் செய்கிறீர்களா என்று கேட்டார். நான் எப்போதுமே அதைச் செய்வதில்லை. எனவே பணிவாக மறுத்துவிட்டேன். அவரே இமாமத் செய்தார். நானும் அந்த கேரளா நண்பரும் அவர் இமாமத் செய்யத் தொழுதோம். பின்னர் கீழே வந்தோம். அப்போது அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்தான் புகழ்பெற்ற தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் என்று எனக்குத் தெரியவில்லை.

பின் நாங்கள் எல்லோரும் ஒரு வேனில் ஏறிக்கொண்டோம். வேன் ரெட்ஹில்ஸுக்கு அருகில் இருந்த ஒரு இடத்துக்குச் சென்றது. அங்கேதான் ரஹ்மானின் அன்பு அன்னையின் அடக்கஸ்தலமிருந்தது. ஆனால் ஏதோ தாஜ்மஹாலுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. நான் இன்னும் தாஜ்மஹாலைப் பார்க்கவில்லை. அவ்வளவு அழகாக அந்த இடம் இருந்தது. வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே சில படங்கள் அவரோடு எடுத்துக்கொண்டோம். அவர் அம்மாவின் அடக்கஸ்தலத்தை மிகவும் ‘ரிச்’ ஆக வைத்திருந்தார்.

தாயாருடன் ரஹ்மான்...

அடக்கஸ்தலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையின் அழகு கண்ணைக்கவர்ந்தது. அதற்கு நேர் எதிரே அம்மாவின் வரைபடம் ஒன்றும் இருந்தது. யாரோ ஒருவர் குர்’ஆன் ஓதிக்கொண்டே இருந்தார். ஒரு யந்திரத்தில், திருமறை ஓதப்படும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க ஏற்பாடு. டீ, டிஃபன் எல்லாம் கொடுக்கப்பட்டது. என்னைப்பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார். என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது. ஒருநாள் சாப்பிட வீட்டுக்கு வாங்க என்று அழைத்துள்ளேன். வருவதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் அது எப்போது என்பதை காலம்தான் முடிவு செய்யவேண்டும். ராஜீவ் மேனனைப் பற்றி அவர் கூட இருந்தபோது தெரியவில்லை.

கடைசியில்தான் சகோதரர் கவிஞர் மஹ்ஷூக் ரஹ்மான் (ஜோதா அக்பர் படத்தில் வரும் க்வாஜா மேரி க்வாஜாவுக்கான தமிழ்ப்பாடலை எழுதியவர்) சொன்னார். அவரும் வந்து இணைந்துகொண்டார். சில ஃபோட்டோக்களை அவர்தான் எனக்காக எடுத்துக்கொடுத்தார். திரும்பி வரும் வழியில் கோயம்பேட்டில் இறங்கிக்கொண்டேன். என் மூத்த மகளைப் பார்ப்பதற்காக. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றார். இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே போவான். ஏனெனில் கொஞ்சம்கூடப் பெருமை இல்லாத, மிக எளிமையான மனிதராக அவர் இருக்கிறார்’ என நாகூர் ரூமி தெரிவித்துள்ளார். இவர் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கல்லறைப் புகைப்படங்கள் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here