உடல் எடையைக் குறைக்க போதைப்பொருள் பயன்படுத்திய விபரீதம்; கிள்ளானில் சிக்கிய சகோதரிகள்!

கோலாலம்பூர்:

கிள்ளான், பண்டார் அர்மாடா புத்ரா (Bandar Armada Putra) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையகம் (Nada) நடத்திய அதிரடி சோதனையில், உடல் எடையை குறைக்க முயன்று போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான சகோதரிகள் உட்பட 61 பேர் பிடிபட்டனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது சகோதரியின் உடல் எடையைக் குறைப்பதற்காக அவருக்கு மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) எனும் போதைப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

காலப்போக்கில் இருவரும் போதைக்கு அடிமையாகி, ஒன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சோதனையின் போது அந்தப் பெண் தனது காதலனுடனும், அவரது சகோதரி தனது கணவருடனும் பிடிபட்டனர்.

பிடிபட்ட சகோதரிகளில் ஒருவர் ஏற்கனவே இரண்டு பேரக்குழந்தைகளுக்கு பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் ஒரு தனித்து வாழும் தாய் (Single Mother) தனது காதலன் மற்றும் சில ஆண்களுடன் பிடிபட்டார்.

கடந்த 2-3 மாதங்களாக போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும், தனது மகள் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் போது அறைக்குள் மறைந்து இதனைப் பயன்படுத்துவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

டெலிவரி நிறுவனத்தில் பகுதி நேரமாகப் பணிபுரியும் அவருக்கு, அவரது காதலன் 50 வெள்ளிக்கு போதைப்பொருளை விநியோகம் செய்துள்ளார்.

சிலாங்கூர் மாநில ‘நாடா’ (Nada) தலைமையிலான இந்தச் சோதனை இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. இதில் குடிநுழைவுத் துறை மற்றும் தேசிய பதிவுத் துறையும் இணைந்து செயல்பட்டன.

“இந்தச் சோதனையில் மொத்தம் 61 பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட முயன்றும் முடியாமல் போனதாக கைது செய்யப்பட்ட பெண்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். தற்போது கைதானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here