புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலம் 4 பேருக்குப் பார்வை; எப்படி சாத்தியம்? விளக்கும் மருத்துவர்

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணத்துக்குப் பிறகும் அவரது புகழ் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் அவரின் கண் தானம். இளம் வயதில் மரணம் அடைந்தாலும், துயரமான அந்தத் தருணத்திலும் சிறிதும் தாமதிக்காமல் அவரின் கண்களை தானம் அளிக்க முன்வந்த அவரின் குடும்பத்தினரின் மனப்பக்குவத்தையும் சமூக அக்கறையையும் பாராட்டியே ஆக வேண்டும்.

தன் குடும்பத்தினருக்கு அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றிருந்த புனித்தும், அவரின் தந்தை ராஜ்குமாரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

புனித் ராஜ்குமாரிடம் தானம் பெற்ற இரண்டு கண்களின் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக பெங்களூரு நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனையின் பிரபல கண் மருத்துவர் புஜாங் ஷெட்டி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் அளித்திருந்த பேட்டியில், புனித் ராஜ்குமாரிடமிருந்து தானம் பெற்ற 2 கருவிழிகளை இரண்டாகப் பிரித்து நான்கு பேருக்குப் பொருத்தினோம்.

6 அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இணைந்து காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த அறுவை சிகிச்சைகளை செய்தனர். சிகிச்சை பெற்ற அனைவரையும் அடுத்த நாள் பரிசோதனை செய்ததில் நான்கு பேருக்குமே பார்வை திரும்பியுள்ளது என்று தெரிவித்தார்.

இரண்டு கண்களை நான்கு பேருக்கு எப்படிப் பொருத்த முடியும். அந்தத் தொழிநுட்பம் பற்றி சென்னையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை மருத்துவர் திரிவேணியிடம் கேட்டோம்:

கண் மாற்று அறுவை சிகிச்சை என்றால் ஒருவரது முழு கண்ணையும் எடுத்து மற்றவருக்குப் பொருத்துவது கிடையாது. கண்ணின் கருவிழியைத்தான் தானம் பெற்று பொருத்துவார்கள். கருவிழி கறுப்பாக இருப்பது போன்று தெரியும். ஆனால் ஒளி ஊடுருவும் வகையில் வெளிப்படையாகத் தெரியும் (Transparent) திசு அது.

கருவிழியில் மிகவும் மெலிதான 6 அடுக்குகள் இருக்கும். 500-550 மைக்ரான்கள் அளவுதான் அதன் தடிமன் இருக்கும். நடுப்பகுதியில் சற்று தடிமனாக 550 மைக்ரான்ஸ் அளவு இருக்கும். புறப்பகுதியில் அதைவிட மெலிதாக இருக்கும்.

பட்டாசு விபத்து, காயங்கள் காரணமாக கருவிழி சேதமடைந்தவர்கள், மரபணு காரணமாக பிறவியிலேயே கூம்பு வடிவ கருவிழி கொண்டவர்கள், கருவிழியில் வேறு நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். கருவிழி பிரச்னைகள் தவிர வேறு காரணங்களால் பார்வை இழந்தவர்களுக்கு இறந்தவர்களின் கண்களை தானம் பெற்றுப் பொருத்த முடியாது.

கருவிழி முழுமையாக பாதிக்கப்பட்டால் தானம் கொடுப்பவர்களிடமிருந்து முழு கருவிழியையும் எடுத்து அப்படியே பொருத்துவார்கள். இப்படிச் செய்தால் இறந்த ஒருவரிடமிருந்து இரண்டு கருவிழிகளை தானம் பெற்று பொருத்தினால் 2 பேருக்கு பார்வை கிடைக்கும்.

சில நோயாளிகளுக்கு 6 அடுக்குகள் கொண்ட கருவிழியின் மேல் பகுதியிலிருக்கும் இரண்டு, மூன்று அடுக்கில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும். மீதமுள்ள அடுக்குகள் ஆரோக்கியமாக இருக்கும். அதே போல சிலருக்கு மேல் அடுக்குகள் ஆரோக்கியமாக இருக்கும்; கீழ் அடுக்குகள் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு 6 அடுக்குகள் கொண்ட முழு கருவிழியையும் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

இறந்த நபர்களிடம் இரண்டு கருவிழியைத் தானம் பெற்று ஒரு கருவிழியை மேல் பாகம், கீழ் பாகம் என இரண்டாகப் பிரித்து இரண்டு பேருக்குப் பொருத்துவோம். அப்படியானால் ஒருவர் இரண்டு கண்களைத் தானம் செய்வது மூலம் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். இந்த வகை கருவிழி மாற்று அறுவை சிகிச்சை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான்.

பொதுவாகவே கருவிழி மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் பிற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைவிட அதிகம். காரணம், கருவிழியில் ரத்த ஓட்டம் கிடையாது. அதனால் புதிய உறுப்பை (Foregin Body) உடல் நிராகரிக்கும் விகிதம் குறைவாக இருக்கும். வெகு சில நேரங்களில் உடல் நிராகரிக்கும் சூழலும் ஏற்படும்.

ஆனால் இதுபோன்று அடுக்குகளை மட்டும் அறுவை சிகிச்சை செய்து மாற்றும்போது உடல் நிராகரிப்புக்கான வாய்ப்புகள் இன்னும் குறையும் என்பதால் இந்தச் சிகிச்சையின் வெற்றி விகிதம் மிக மிக அதிகம். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு தையல் போட மாட்டார்கள் என்பதால் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தியாவில் பொதுவாக 1.5 லட்சம் கருவிழிகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். அதுதவிர, கருவிழி பாதிக்கப்பட்டு அதன் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25,000 – 30,000 அதிகரித்துக்கொண்டே வரும். அந்த வகையில் ஆண்டுக்கு சராசரியாக 2-2.5 லட்சம் கருவிழிகளுக்கான தேவை உள்ளது.

ஆனால் இறந்தவர்களிடமிருந்து தானம் கிடைப்பது 25,000 கருவிழிகள் மட்டுமே. அதுவும் கோவிட் சூழலுக்குப் பிறகு தானம் கிடைப்பது சராசரியாக வெறும் 12,000 மட்டுமே. இதனால் கருவிழிக்கான தேவை அதிகமாக இருக்கிறது.

ஒரு நபர் இறந்த 4-6 மணி நேரத்துக்குள் கருவிழி தானம் கொடுத்துவிட வேண்டும். தானம் செய்வதால் இறந்த நபரின் முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஒரு நபர் இறந்துவிட்டால் அவரின் கண்களை உடனே மூடிவிட வேண்டும். கண்கள் திறந்திருந்தால் உலர ஆரம்பித்துவிடும்.

அதனால் கருவிழியின் தெளிவு போய்விடும். கண்களுக்கு நேராக ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தாலும் அதனை நிறுத்திவிட வேண்டும். இதுவும் கண்களை உலர வைக்கும். ஆனால் ஃப்ரீசர் பாக்ஸில் உடலை வைப்பதில் பிரச்னை இல்லை. சிறிய துணியை நனைத்து கண்களின் மேல் வைத்தால் உலராமல் பாதுகாக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here