இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சில அதிர்ச்சிகர உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் டி.என்.ஏ சோதனை மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை எப்படி கண்டறிந்தார் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
2018ம் ஆண்டு அந்த இளம்பெண், தனது பூர்வீகம் குறித்து தெரிந்து கொள்வதற்காக டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை மேற்கொண்டிருக்கிறார். (இங்கிலாந்தில் மரபணு சோதனையை வீட்டில் இருந்தவாறே செய்து கொள்ள முடியும்). அந்த மரபணு பரிசோதனையில் முடிவில் அவர் எதிர்பார்த்தது போலவே தான் ஒரு இத்தாலி பெண் இல்லை என்பதை அவர் தெரிந்து கொண்டார்.
ஆனால் அந்த சோதனை முடிவு கிடைத்த பின்னர் தான் அவருக்கு சிக்கலே தொடங்கியது. சிறிது நாட்களில் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி உங்களது விவரங்களை கூற முடியுமா ஏனென்றால் என்னுடைய மகளுக்குள், உங்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.
ஆனால், தான் ஒரு மரபணு கொடையாளர் மூலம் பிறந்த குழந்தை என அந்த டிக் டாக் பிரபலத்துக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்மணி கூறியவாறு அவருடைய மகளும், தானும் ஒரே விந்தணு கொடையாளர் மூலம் பிறந்த சகோதரிகளாக இருக்கக் கூடும் என யூகித்தார். இது தவிர அந்த டிக் டாக் பிரபலத்தின் தாய் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்பதால் அவரது சகோதரிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
தனக்கு, வேறு யாரேனும் மரபணு ரீதியில் சகோதர்கள் இருக்கிறார்களா என தெரிந்துகொள்வதற்காக பிரைவேட் ஃபேஸ்புக் குரூப் ஒன்றை தொடங்கி தனது சகோதரிகளுக்கு லிங்கை அனுப்பி வைத்திருக்கிறார் அந்த டிக் டாக் பெண். இந்த ஃபேஸ்புக் குரூப்பின் மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அந்த டிக் டாக் பிரபலம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பிருக்கிறது.
தனது வீடியோவில் இந்த தகவல்களை தெரிவித்துள்ள அந்த டிக் டாக் பிரபலம், மரபணு ரீதியிலான தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் உறவை பகிர்ந்து கொள்ள பயமாக இருப்பதாகவும், ஒரு வேளை எதிர்காலத்தில் என்னுடைய சகோதரருடனே டேட்டிங் செய்துவிடுவேனோ என்ற அச்சமும் இருந்து வருவதாக கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் ஒரு விந்தணு கொடையாளர், 10 குடும்பங்களுக்கு தனது விந்தணுவை தானம் செய்ய முடியும். 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டதிருத்தத்தின் மூலம் விந்தணு கொடையாளர்கள் குறித்த முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும், மேலும் தானமாக பெற்று பிறந்த குழந்தைகளால் அவர்கள் 18 வயதை கடந்த பின்னர் தங்களின் மரபணு ரீதியிலான தந்தை யார் என அறிந்து கொள்ள முடியும்.