உணவு தான் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் வேராகக் கருதப்படுகிறது. ‘நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, நீங்கள் அதையே பிரதிபலிப்பீர்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் மற்றும் மன நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது.
அது மட்டுமின்றி, நீங்கள் உண்ணும் உணவில் ஆறு சுவைகளும் இருக்க வேண்டும். பேலன்ஸ்ட் டயட் என்று கூறப்படும் சரிவிகித உணவு வெவ்வேறு சுவையுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும்.
நாம் தினமும் பல வகையான உணவு வகைகளை சாப்பிடுகிறோம். எந்த காய் அல்லது உணவு வகையுடன் எதைச் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.
அப்படிச் செய்தால், உங்கள் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தீவிரமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த வெவ்வேறு குணங்கள் கொண்ட உணவுகளை ஒன்றாக சாப்பிடும் போது, அது சத்துக்களை வழங்குவதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும் உணவாக மாறுகிறது.
ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டிக்ஸா பவ்சார், ‘பொருந்தாத உணவு வகைகளை சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் செரிமானக் கோளாறு, அழற்சி, ஆட்டோ-இம்யூன் நோய்கள் மற்றும் சரும குறைபாடுகள் ஏற்படலாம்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வகையான உணவுகளை ‘விருத்த ஆகாரம்’ (ஒன்றோடொன்று முரண் படும் உணவு) என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளில், எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி விவரிக்கிறார்.
பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக் கூடாது. பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.


குறிப்பிட்ட பழங்களை பால் மற்றும் பால் பொருட்களுடன் சேர்த்து உண்ணக்கூடாது. புளிப்புச் சுவையுடைய பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி, உள்ளிட்ட பழங்கள் மற்றும் வாழைப்பழத்தை எப்போதுமே பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பால், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை பழங்களோடு சேர்த்து சாப்பிடும் போது சளி, இருமல், மற்றும் அலர்ஜி ஏற்படலாம். அது மட்டுமின்றி, செரிமானம் ஆகாமல் இந்த உணவுகள் உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி விடும்.


தேனை எப்போதுமே சூடு படுத்தக்கூடாது. பல்வேறு குணமாக்கும் பண்புகள் கொண்ட தேனில் இருக்கும் என்சைம்கள், தேனை சூடுபடுத்தும்போது அழிந்து விடும். சத்துக்கள் நீங்குவது மட்டுமின்றி, சூடான தேன் உடலில் Ama எனப்படும் நச்சுக்களை உருவாக்கி, செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.