டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஒப்பந்த மருத்துவர்கள்

கோலாம்பூர், நவம்பர் 22 :

5,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் தங்கள் சேவை சம்பந்தப்பட்ட, தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி, மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் குழுவான Hartal Doktor Kontrak இதனை நடத்தவுள்ளது. நடக்கவிருக்கும் இந்தப் பேரணி அரசாங்கத்திற்கோ அல்லது அரசியல் இயக்கத்திற்கோ எதிரானது அல்ல, மாறாக ஒப்பந்த மருத்துவர்களுக்கு நீதியைக் கோரும் பேரணி என்று அது கூறியுள்ளது.

“ஒப்பந்த மருத்துவர்களைக் கொண்ட மருத்துவமனைகளில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில், அமைதியான இந்த பேரணி நடத்தப்படும்” என்று ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக் குழுவின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹமட் யாசின் காஸ்மோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தத் தேதியில் இருந்து ஒப்பந்த டாக்டர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

இந்த பேரணி ஒப்பந்த மருத்துவர்களின் இடைவேளையின் போது, அதாவது நண்பகல் வேளையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் வரை போராட்டம் நடைபெறும் என்றும் முஹமட் யாசின் கூறினார்.

“நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புகிறோம். இருப்பினும், நாங்கள் இன்னும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்போம், மேலும் இது மருத்துவமனைகளில் எங்கள் வேலையை பாதிக்காது என்பதை உறுதி செய்வோம்.

“பேரணி வாகன நிறுத்துமிடங்கள், வார்டுகள் மற்றும் மருத்துவமனை லாபிகளுக்கு முன்னால் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் முகமூடிகளை அணிவதன் மூலமும், உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பதன் மூலமும் SOP களுக்கு இணங்குவதை நாங்கள் உறுதி செய்வோம், ”என்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை மாதம், ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக் குழுவினர் , ஒப்பந்த முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது நாடு தழுவிய வெளிநடப்புச் செய்ய அரசாங்கத்திற்கு 26 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.

ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தில், ஒப்பந்த மருத்துவர்கள் நியாயமான தொழில் பாதை மற்றும் நிரந்தர பணியிடங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு இணையான சலுகைகளை கோரியிருந்தனர்.

முன்னதாக, ஜூன் 29 அன்று, மலேசிய மருத்துவ சங்கம் மொத்தம் 23,077 ஒப்பந்த மருத்துவர்களில் 789 பேருக்கு மட்டுமே 2016 முதல் நாட்டின் பொது சுகாதார அமைப்பில் நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்டதாக வெளிப்படுத்தியது.

மேலும் நவம்பர் 2 அன்று, வெளியாகிய சமீபத்திய வரவு செலவுத்திட்டம் 2022 இன் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த இரண்டாவது வேலைநிறுத்தப் பேரணியை நடத்தப்போவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here