பிரிட்டன் நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 27 புலம்பெயர்ந்தோர் பலி !

நேற்று வடக்கு பிரெஞ்சு கடற்கரையில், பிரான்ஸில் இருந்து இங்கிலாந்து நோக்கி செல்ல முயன்ற குறைந்தது 27 புலம்பெயர்ந்தோர், அவர்களின் படகு மூழ்கியதன் காரணமாக இறந்தனர்,

பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன், கோப்ரா குழுவின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கலேஸ் அருகே படகு மூழ்கியதில் 27-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து டவுனிங் ஸ்ட்ரீட் இந்த நடவடிக்கையை அறிவித்தது.

புதன்கிழமை பிற்பகல், ஆங்கிலக் கால்வாயை காற்று நிரப்பப்பட்ட படகைக் கொண்டு கடக்க முயன்றபோது, ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட குறைந்தது 31 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரான்ஸ் மேயர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் அது 27 பேரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 27 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.

கலேஸ் பகுதியில் இந்த படகு கவிழ்ந்ததில், மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வழியில் பிரிட்டனை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகிறது.

தகவல்களின்படி, இந்த சம்பவம் தொடர்பாக நான்கு புலம்பெயர்ந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நீரில் உடல்களைப் பார்த்த ஒரு மீனவர் எச்சரிக்கையை எழுப்பினார், மீட்புப் பணியின் பின்னர் உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here