ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு: பிரிட்டனில் தொற்று எண்ணிக்கை 9 ஆனது

ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு  ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த வகை ஓமிக்ரான் வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து ஸ்காட்லாந்து சுகாதார செயலர் ஹூமாஸ் யூசப் கூறியதாவது: இதுவரை 6 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. லங்காஷைர் பகுதியில் 4 பேருக்கும், கிரேட்டர் க்ளாஸ்கோவில் இருவருக்கும் உறுதியாகியுள்ளது. அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் தொற்று தொடர்பாளர் கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

புதிய வகை வைரஸ் குறித்து பல தகவல்களும் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையில் மக்கள் இன்னும் அதிகமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஓமிக்ரான் பரவலால், பிரிட்டனில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் பொது இடங்களில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல், பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதலின் போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனை முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்களுக்கு பிரிட்டனுக்குள் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here