தாப்பா, டிசம்பர் 2 :
சமீபத்தில் நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த இருவழி கூட்டரசு நெடுஞ்சாலை FT059 தாப்பா-ரிங்கிலேட் (கேமரன் ஹைலண்ட்ஸ்) சாலை இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் திறக்கப்படும் என்று பேராக் பொதுப்பணித் துறை (JKR) அறிக்கை மூலம் தெரிவித்தது.
எவ்வாறாயினும், குறிப்பாக மழைக்காலத்தில் சாலையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சாலைப் பயனாளிகள் ஜாலான் பெர்செத்துவான் எஃப்டி185, ஜாலான் சிம்பாங் புலை-லோஜிங் முதல் கேமரன் ஹைலண்ட்ஸ் வரையிலான மாற்றுச் சாலையையும் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்தது.
அத்தோடு, தாப்பா-கேமரன் ஹைலண்ட்ஸில் இருந்து ஜாலான் பகாங் செல்லும் சாலையின் மைல் 25 மற்றும் மைல் 26 இல் முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அந்தச் சாலை அனைத்து வாகனங்களுக்கும் முற்றிலும் மூடப்பட்டது தொடர்பில் எல்லா நாளிதழ்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.
சாலைப் பகுதியில் நிலச்சரிவுகளைச் சுத்தம் செய்யும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் வகையில் இந்த சாலை மூடப்பட்டிருந்தது என்றும் கேமரன்மலைக்கு செல்லும் சாலையை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு முன்னர் போலீஸார் அறிவுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.