மீன்பிடிக்கச் சென்றபோது வலிப்பு வந்த மகன் மற்றும் காப்பாற்ற முயன்ற தந்தை ஆகிய இருவரும் கடலில் மூழ்கி மரணம்

சுங்கைப் பட்டாணி, டிசம்பர் 2 :

இன்று காலை தந்தையும் மகனும் மீன்பிடிக்கச் சென்றபோது, மகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், தனது மகனைக் காப்பாற்ற முயன்ற மீனவர் மற்றும் வலிப்பு வந்த அவர் மகனும் உயிரிழந்த சோகம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வலிப்பு நோயாளியான ஜுல்ஹுஸ்னி முகமட் ஆரிஃபி, தண்ணீரில் விழுவதற்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர், இதனால் அவரது தந்தை தனது மகனைக் காப்பாற்ற கடலில் குதித்ததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முகமட் அரிஃபி ஏ ரசாக், 68, மற்றும் மகன் சுல்ஹுஸ்னி, 29, ஆகியோரின் உடல்கள் கம்போங் தேபி சுங்கை கடற்கரையில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அதே நேரத்தில் அவர்களின் படகு கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இங்குள்ள பசார் பிசிக் கோத்தா கோல முடாவில், உடல்களை அடையாளம் காண்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது மிகவும் நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட தகவலின் அடிப்படையில், இருவரும் தங்களது வழக்கமான மீன்பிடி தொழிலுக்காக, காலை 7 மணியளவில் கம்போங் மாதங் பாகனில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டதாக கோல முடா மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் அட்ஜ்லி அபு ஷா தெரிவித்தார்.

“காலை 10.50 மணியளவில் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சடலங்களை அடையாளம் காண சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“சுல்ஹுஸ்னிக்கு வலிப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினர் சந்தேகிக்கிறார்கள் மற்றும் அவரது தந்தை அவரை காப்பாற்ற முயன்றபோது தண்ணீரில் விழுந்தார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இறந்தவர்களது உடல்கள் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் குற்றவியல் சம்பந்தமான எந்த கூறுகளும் அறியப்படவில்லை என்று போலீசார் கூறியதாகவும் அட்ஜ்லி கூறினார்.

மேலும் இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here