4 நாட்களுக்கு நடைபெறும் மலேசியக் குடும்பம் கொண்டாட்டம்

கோலாலம்பூர், டிச.4-

நாட்டின் 9ஆவது பிரதமராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிமுகப்படுத்திய ‘மலேசியக் குடும்பம்’ எனும் கோட்பாடு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மலேசியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இணையச் செய்வதற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இக்கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி 100 HARI ASPIRASI KELUARGA MALAYSIA எனும் மலேசியக் குடும்ப விருப்ப 100ஆவது தினக் கொண்டாட்டம் நடைபெறுகின்றது. இந்தக் கொண்டாட்டம் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரையில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகின்றது.

அதன் தொடக்கவிழா டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் இந்தக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைப்பார்.

அன்றைய தினம் தேசிய தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி வரவேற்புரை ஆற்றிய பின்பு பிரதமர் அதிகாரப்பூர்வ உரை வழங்குவார். தொடர்ந்து தொடக்கவிழா நடைபெறும். குறிப்பாக அதில் காணொளி திரையிடலும் மலேசியக் குடும்பப் பாடல் ஒலிபரப்பும் இடம்பெறும்.

அந்த மூன்று நாட்களுக்கு காலை 9 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், இலாகாக்களின் கண்காட்சி முகப்பிடங்களும் இடம்பெறும். இது தவிர்த்து சிறப்புக் கழிவுடன் சம்மன் செலுத்தக்கூடிய முகப்பிடங்களும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் மக்களைக் கவரும் வகையில் மின்னியல் விளையாட்டுப் போட்டிகளும் அதிர்ஷ்டக் குலுக்கலும் இடம்பெறும். இந்தக் கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியில் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் 20 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மெய்நிகர் முறையிலும் இந்தக் கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆன்லைன் மூலம் இந்தக் கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கலாம்.

இந்நிலையில் இந்தக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சீரான முறையில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக எஸ்ஓபி விதிமுறைகளை கொண்டாட்டத்திற்கு வரும் வருகையாளர்கள் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here