காரின் டயரை உதைத்ததற்காக இரு துப்புரவு பணியாளர்கள் மீது பாராங் கத்தி தாக்குதல்

சைபர்ஜெயா, டிசம்பர் 6 :

டெங்கிலில் உள்ள தாமான் பெர்மாத்தா அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில், நேற்று துப்புரவு நிறுவன ஊழியர்கள் இருவர் மீது, பாராங் கத்தி ஏந்திய நபர் ஒருவர் தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆய்வாளர் வான் காமாருல் அஸ்ரான் வான் யூசோப் இதுபற்றிக் கூறியபோது, முதலில் பாதிக்கப்பட்ட 24 வயதான பணியாளருக்கு அவரது வலது கையில் காயம் ஏற்பட்டதுடன் வலது கையும் உடைந்தது. மற்றைய 44 வயதான பாதிக்கப்பட்டவரது இடது காது கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட இருவரும் புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்றார்.

சம்பவத்திற்கு முன்னதாக காலை 7.40 மணியளவில், சந்தேகநபருக்கு சொந்தமான காரின் டயரை உதைத்ததற்காக சந்தேகநபர் அவர்களுக்கு அறிவுறுத்தியபோது, ​​இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து வேலைக்குச் செல்வதற்கு முன், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

“பணியாளர்கள் கார் டயரை உதைத்தது, சந்தேக நபரை வருத்தப்படுத்தியது அதனால் அவர்களைப் பழிவாங்க சந்தேக நபர் திட்டமிட்டார்,” என்று அவர் இன்று குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்த ஊடக மாநாட்டில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் அவர்களை இடைமறித்து பராங்கால் தாக்கினார் என்றார்.

நேற்று இரவு 11.57 மணியளவில் செப்பாங்கின் கேஐபி மாலில் உள்ள துரித உணவு விற்பனை நிலையத்திற்கு அருகே 28 வயதான அந்த சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர் என்று வான் கமாருல் அஸ்ரான் கூறினார்.

“கைது செய்தபோது சந்தேக நபரிடம் எந்த ஆயுதமும் காணப்படவில்லை, ஏனெனில் அவர் தப்பிச் சென்றபோதே அதை அப்புறப்படுத்திஇருந்தார். மேலும் போலீசார் விசாரணை செய்து பராங்கைக் கண்டுபிடிப்பார்கள், ”என்று அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபருக்கு இரண்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தன. அத்தோடு சந்தேகநபர் ஒருவாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 326ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here