சபாவில் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் 87 விழுக்காடு குறைந்துள்ளது- சபா முதல்வர்

கோத்தா கினாபாலு, டிசம்பர் 9 :

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் சபா மாநில அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சியைத் தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் சபா 87 விழுக்காடு குறைந்துள்ளது.

சபா முதல்வர் டத்தோ ஹாஜி நூர் கூறுகையில், ஊழல் குற்றங்கள் குறித்த அரசு ஊழியர்களின் விழிப்புணர்வு அளவு அதிகரித்துள்ளதுடன் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பகிரப்பட்ட பொறுப்பும் அதிகரித்து வருவதே இந்த குற்றங்கள் குறிப்பிடத்தக்க சரிவை காட்டுவதற்கு முக்கிய காரணம் என்றார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, ஆறு குற்றப் பதிவுகள் மட்டுமே விசாரணைக்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இது கடந்த வருடம் 9 ஆகவும் , 2019இல் 11 வழக்காகவும் 2018 இல் 47 வழக்குகளாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“ஊழலுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து செயலாற்றும் சபா மக்களின் தீவிரத்தன்மையையும் ஊழலை ஒழிக்க என்னும் விடா முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது,” என்று இன்று மெனாரா கினாபாலுவில் நடைபெற்ற மாநில அளவிலான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின விழாவில் அவர் தனது உரையில் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹாஜிஜி, அரசு ஊழியர்களிடையே உயர் மட்ட நேர்மையை உறுதி செய்வதற்காக, பொதுத்துறைகளில் ஊழல் எதிர்ப்பு திட்டத்தை (OACP) உருவாக்குவதை சபா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

மாநிலத்தில் உள்ள 11 அமைச்சகங்களில் ஒன்பது அமைச்சகங்கள் அந்தந்த OACP களை செயல்படுத்தியுள்ளன, இது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொது சேவை வழங்கலை மேம்படுத்தும் என்று ஹாஜிஜி கூறினார்.

“சபாவின் அரசாங்கத் துறைகள் மற்றும் முகவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன என்றும் அவை ஒட்டுமொத்த மக்களின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பாடுபடுகின்றன என்றும் நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சம்மந்தமாக MACC க்கு புகாரளித்து தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் “மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு முக்கியமான தகவல்களை வழங்குபவர்கள், விசில்ப்ளோவர் பாதுகாப்பு சட்டம் 2010ன் (Whistleblower Protection Act 2010) கீழ் பாதுகாக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.-

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here