3 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சினோவாக் தடுப்பூசி பயன்பாடு குறித்த ஆய்வுக்காக 663 மாதிரிகள் சேகரிப்பு

சிபு, டிசம்பர் 11 :

3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சினோவாக் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதற்கு ஏற்புடையதா என்பதை ஆய்வுசெய்வதற்கு, இதுவரை நாடு முழுவதும் 663 மாதிரிகளை சுகாதார அமைச்சகம் (MOH) சேகரித்துள்ளது.

சீனாவின் சினோவாக் லைஃப் சயின்சஸ் கம்பெனி லிமிடெட் நிதியுதவியுடன் நடத்தப்படும் இந்த ஆய்வுகள், சரவாக்கில் உள்ள சிபு மருத்துவமனை மற்றும் மிரி மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. மேலும் இந்த ஆய்வில் மொத்தம் 2,000 குழந்தைகளை உள்ளடக்கியது என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் கூறினார்.

சேகரிக்கப்பட்ட 663 மாதிரிகளில், 508 சரவாக்கிலிருந்து வந்தவை என்றும், ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இடையில் பெறப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், “ஆய்வுகளுக்கு 2,000 மாதிரிகள் தேவை. மற்ற நாடுகளில் இதே போன்ற ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இருந்தாலும் மலேசியா முதலில் தனது சொந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ”என்று அவர் இன்று சிபு மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு இதேபோன்ற ஆய்வுகளை அரசாங்கம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here