வெள்ளத்திற்குப் பின்னரான மீட்புக்காக RM100 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது

கோலாலம்பூர், டிசம்பர் 23 :

கடந்த வாரம் முதல் நாட்டின் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் பல முன்முயற்சிகளை அறிவித்துள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ முகமட் ஷஹர் அப்துல்லா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த உதவிகளில், வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்காக RM100 மில்லியன் நிதியும் உள்ளடக்கியுள்ளது என்றார்.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 5,000 வெள்ளியும் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 1,000 வெள்ளியையும் அரசாங்கம் வழங்கும் என்றார்.

அதுமட்டுமின்றி, வீடு அல்லது சொத்துக் கடன்கள், கார் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவற்றுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளை அரசாங்கம் ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க்கும் அல்லது தவணைக் கட்டணத்தை குறைக்கும் என்று அவர் கூறினார்.

“Bank Simpanan Nasional (BSN) RM5,000 வரையிலான வட்டியில்லா தனிநபர் கடன் நிதியுதவி மற்றும் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மாதாந்திர தவணைகளை ஒத்திவைத்துள்ளது என்றார்.

“MSME (நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தொழில்முனைவோருக்கு, தெக்குன் நேசனலின் கீழ் வெள்ள நிவாரணக் கடன்களுக்காக அரசாங்கம் RM30 மில்லியன் சிறப்பு நிதியுதவியை வழங்கியுள்ளது,” என்று செனட்டர் செருவாண்டி சாத்திடம் அவர் பதிலளித்தார்.

பேங்க் நெகாரா மலேசியாவும் 2022 பேரிடர் நிவாரண வசதி மூலம் பாதிக்கப்பட்ட MSME தொழில்முனைவோருக்காக RM20 மில்லியன் நிதி வசதியை அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

“SME வங்கியின் தொழில்முனைவோரின் வணிக வளாக குத்தகைதாரர்களுக்கு இரண்டு மாத வாடகை விலக்கு அளிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here