கோத்தா கினாபாலு, டிசம்பர் 28 :
தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நாடுகளிலிருந்தும், கோவிட்-19 தாக்கம் அதிகமுள்ள நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள், இன்று அமலுக்கு வரும் 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை சபாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாநில உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் டத்தோ மசிடி மஞ்சுன் தெரிவித்துள்ளார்.
தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“சொந்த நாட்டிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவிட்-19 ஆர்டி-பிசிஆர் சோதனையையும், வந்தவுடன் இதேபோன்ற சோதனையையும் அவர்கள் எடுக்க வேண்டும். அனால் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
“அது தவிர, ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் ஐந்தாவது நாளில் RT-PCR சோதனையும் செய்யப்பட வேண்டும், அதேபோல 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு எட்டாவது நாளிலும் RT-PCR சோதனையும் செய்யப்பட வேண்டும். மேலும் கடைசி நாளில் இடர் மதிப்பீடு மற்றும் தேவைப்பட்டால் அவர்களின் தனிமைப்படுத்தலை நீட்டிக்க வேண்டும். ”என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.
சபாவிற்கு புறப்படுவதற்கு முன், பயணிகள் https://sm.jknsabah.gov.my/HDF/hdf.php என்ற இணையதளத்தில் சுகாதார அறிவிப்புப் படிவத்தை (eHDF) நிரப்ப வேண்டும் என்றும், குடிநுழைவுத் துறையின் நுழைவு வழிகாட்டுதல்களுக்கு அவர்கள் இணங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சபாவில் நேற்று 125 புதிய கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இதுவரை மொத்தமாக 239,715 தொற்றுக்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.