நிறுத்தப்பட்டிருந்த காரில், மூத்த குடிமகன் ஒருவர் மாரடைப்பால் இறந்து கிடக்க காணப்பட்டார்

கோல கங்சார், ஜனவரி 10 :

கடந்த சனிக்கிழமை இரவு, இங்குள்ள கடைகளின் வரிசையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில், மூத்த குடிமகன் ஒருவர் மாரடைப்பால் இறந்து கிடக்க காணப்பட்டார்.

இங்குள்ள தாமான் ஜெர்லூனைச் சேர்ந்த ஹெரிசான் யாக்கோப், 72, என்ற முதியவரே அவரது காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், மருத்துவப் பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாக, கோல கங்சார் மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் உமர் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு 7.24 மணியளவில் நடந்த சம்பவத்தில், அந்த நபர் தனது புரோட்டான் சாகா வகை காரை ஜாலான் கங்சார் வழியாக உள்ள கடைகளுக்கு முன்னால் நிறுத்தியிருந்தார்.

காரின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், காரின் இயந்திரத்தை நிறுத்தியுள்ளார்.

உமர் பக்தியார் கூறுகையில், அருகில் இருந்த தொலைத்தொடர்பு உபகரணக் கடையின் இரண்டு பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர் மூச்சு விட சிரமப்படுவது போல், அந்த நபர் வித்தியாசமாக நடந்துகொண்டதைக் கண்டனர்.

அந்த நபர் தனது மார்பில் மீண்டும் மீண்டும் அடிப்பது போல் தோன்றியதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறினர்.

“உடனே அந்த தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையைத் தொடர்புகொண்டனர். பாதிக்கப்பட்டவருக்கு உடல் காயங்கள் எதுவும் இல்லை. அவரது பணமும் கைபேசியும் அவரிடம் இருந்தன.

“அவரது உறவினரை விசாரணை செய்ததில், அவருக்கு இதய பிரச்சினைகள் இருப்பதையும், கடந்த இரண்டு வருடங்களாக தினமும் மருந்து உட்கொண்டதையும் அறியமுடிந்தது. இருப்பினும், அந்த நபர் கடந்த சில வாரங்களாக மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.”

அந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோல கங்சார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here