மாராங், ஜனவரி 11:
திரெங்கானுவில் போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை விற்றதாக நம்பப்படும் தனியார் கிளினிக்கின் மருத்துவருக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்புக்காவல் உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலதிக போலீஸ் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 51 வயதான அந்த வைத்தியருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவை வியாழக்கிழமை வரை நீட்டிக்க மாஜிஸ்திரேட் எங்கு நூருல் ஐன் அனுமதித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று, போலி தடுப்பூசி சான்றிதழ்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் தடுப்பூசி எதிர்ப்பு மருத்துவர் என நம்பப்படும் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
தடுப்பூசி தொடர்பாக மொத்தம் 1,900 நபர்கள் அந்த கிளினிக்குடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக திரெங்கானு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ரோஹைமி முகமட் இசா கூறியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போலி தடுப்பூசி சான்றிதழ்களை உண்மையில் பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தடுப்பூசி போடாமல் தடுப்பூசி சான்றிதழை பெறுவதற்கு ஒரு நபருக்கு RM400 முதல் RM600 வரை மருத்துவர் வசூலித்ததாக நம்பப்படுகிறது.





















