புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் RM111.2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

ஈப்போ, ஜனவரி 16 :

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) கடந்த வியாழன் அன்று பத்து காஜாவின் புஸிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்திய சோதனையில், RM111.2 மில்லியன் மதிப்புள்ள கேத்தமைன் வகை போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது, இதுவே இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆகக்கூடிய மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாகும்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை கூறுகையில், போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாக பயன்படுத்தப்படும் வளாகத்தில், பேராக் NCIDயுடன் இணைந்து வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணி முதல் மறுநாள் காலை 5.45 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.

“போதைப்பொருள் கடத்தல், செயலாக்கம் மற்றும் உள்ளூர் சந்தைக்கு கெத்தமைன் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் 28 முதல் 40 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை நாங்கள் கைது செய்துள்ளோம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

2 டன் எடையுள்ள கெத்தமைனைத் தவிர, ரசாயனங்கள் மற்றும் போதைப்பொருள் பதப்படுத்த பயன்படுத்தப்படும் சாதனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 6.7 மில்லியன் போதை பித்தர்கள் பயன்படுத்த முடியும்.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தக் குழு செயலில் உள்ளது என்பதை அறியமுடிகிறது.

“தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு வளாகத்தை அதிகாரிகளிடமிருந்து மறைத்து, போதைமருந்துகளை செயலாக்க ஒரு ஆய்வகமாகப் பயன்படுத்தி வந்தனர்” என்று அயோப் கான் கூறினார்.

மேலும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ஆறு வாகனங்கள், நகைகள் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட சுமார் RM201,307.50 மதிப்புள்ள பல்வேறு சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் தவிர, போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனையில் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் கெத்தமைனுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நாளை வரை 4 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதாவது அஸ்ருல் சஃபுவான் முகமட் புவாட், 28, முகமட் கையூம் முகமட் அசார், 23, மற்றும் எஸ். பத்மநாதன், 44,என்ற மூவர்” தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here