கோலாலம்பூர், ஜனவரி 19 :
கடந்த திங்கட்கிழமை ஜாலான் அம்பாங்கில் போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில், இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 9 சீனப் பிரஜைகள் மற்றும் ஒரு உள்ளூர் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோலாலம்பூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் மகிதிஷாம் இஷாக் கூறுகையில், ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை அப்பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் ஒரு சீனப் பெண்ணும் 22 முதல் 35 வயதுடைய 6 சீன ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இணைய மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மடிக்கணினி மற்றும் 17 மொபைல் போன்கள் உள்ளிட்ட உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
“அதே நாளில், அதே பகுதியில் உள்ள மற்றொரு வளாகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 22 முதல் 35 வயதுடைய ஒரு உள்ளூர் பெண் மற்றும் இரண்டு சீன ஆண்களை கைது செய்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டாவது சோதனையில், 6 மொபைல் போன்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட எழுத்துப்பூர்வ ஆவணத்தின் நகலை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
“சந்தேக நபர்கள் அனைவரும் ஒரு மோசடிக்கும்பலின் ஊழியர்கள் என்றும், 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயல்படும் இரண்டு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளிநாட்டிலிருந்து வரும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அவர்கள் மோசடி செய்துவந்தனர் என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
“மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
அத்தோடு இழப்புகளின் மதிப்பு (மோசடி செய்யப்பட்ட மதிப்பு) இன்னும் விசாரணையில் உள்ளது.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் ஜனவரி 17 முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், எந்த ஒரு பணப்பரிவர்த்தனை செய்யும் முன் சரி பார்க்கவும், இதுபோன்ற மோசடி வழக்குகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முன்வரவும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“எந்தவொரு குற்றம் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை பற்றிய தகவலை CCID தகவல் தெரிவிக்கும் 013-2111 222 என்ற எண்ணில் WhatsApp மூலம் அனுப்பலாம் அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2146 0584/0585, CCID மோசடி பதில் மையம் 03-26910 1595 அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்,” என்றார்.