கோலத்திரெங்கானு, ஜனவரி 23 :
வேட்டையாடுபவர்களின் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக, வனவிலங்குகளை பார்க்கும் அல்லது காணும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரெங்கானு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் (Perhilitan) இயக்குநர் லூ கீன் சியோங் இதுபற்றிக் கூறும்போது, வனவிலங்குகளைப் பார்க்கும் காணொளிகளில் அவை காணப்பட்ட இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்வது பொறுப்பற்ற செயல்” அத்தோடு அக்காணொளிகளை அடுத்த நடவடிக்கைக்கு உதவும் வகையில் தமது துறைக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
“ஒருவேளை மற்றவர்கள் அந்த இருப்பிடத்தைச் சுற்றி, காட்டு விலங்குகள் இருப்பதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று நாம் நம்பி அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறோம் , ஆனால் சமூக ஊடகங்களில் பகிர்வதால் எதிர்மறையான விளைவுகளும் உள்ளன, எனவே இது நிறுத்தப்பட வேண்டும்” என்று லூ கூறினார்.
நேற்றிரவு, பாகாவில் (Paka) இருக்கும் ஒரு புலியின் 33 வினாடிகள் நீடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பற்றைக்குள் இருந்து புலி வெளியேறி, கிராம மக்கள் பயன்படுத்தும் பாதையை கடக்கும் புலியின் நடமாட்டத்தை பதிவு செய்து, டுங்குன் அருகே உள்ள சாந்தோங், பாகாவில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுநர் ஒருவரால் இது வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், புலியின் கண்டுபிடிப்பு தொடர்பாக திரெங்கானு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பு இதுவரை எந்த தரப்பினரிடமிருந்தும் புகாரைப் பெறவில்லை என்றும் லூ கூறினார்.
“புலியை சந்திக்கும் நபர்கள், விலங்குகள் ஆக்ரோஷமாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் காணொளி எடுக்க விரும்பினால், அதை தொலைவில் இருந்து செய்து, வனவிலங்குகளின் கண்காணிப்பை எளிதாக்க வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பிடம் புகாரளிக்கவும்,” என்று லூ கூறினார்.
























