மலாக்காவில் வறுமைக்கோட்டின் கீழுள்ள (B40) 32,800 பேருக்கு இலவச பேருந்து சேவை; டத்தோ ரஹ்மட் மரிமான் தகவல்

மலாக்கா, ஜனவரி 25 :

மாநிலத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள (B40) குழுவைச் சேர்ந்த 32,800 நபர்களுக்கு மலாக்கா அரசாங்கம் இலவச மற்றும் வரம்பற்ற பேருந்து சேவைகளை வழங்கும் என்று அரசுப் பணிகள், போக்குவரத்து, பொது வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் வெள்ள மேலாண்மைக் குழுவின் தலைவர் டத்தோ ரஹ்மட் மரிமான் தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டின் கீழுள்ள 32,800 தனிநபர்கள் இந்த இலவச பேருந்து சேவை அட்டையைப் பெறுவார்கள் என்றும் இதனைக்கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

“இந்தச் சேவையைப் பெறுபவர்களின் பட்டியல் மாநில சமூக நலத் துறை (SWD) மற்றும் மலாக்கா இஸ்லாமிய மதச்சபை (MAIM) ஆகியவற்றிலிருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மாநில அரசு நிர்வாகம் 100 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்,” என்று அவர் கம்போங் பத்து பூத்தே, பாயா தாளத்தில் உள்ள சூராவ் கியாய் ஹெச்ஜே ஹுசினில் இன்று நடந்த எரிசக்தி ஆணையத்தின் பாராட்டு விழாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆயர் மோலேக் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ரஹ்மட் தொடர்ந்து கூறுகையில், இந்த திட்டம் தவிர, தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் 100 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் விஷயங்களில் புதிய சொத்துக்கள் வாங்குதல், இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான ஓய்வு இடம் மற்றும் ஊனமுற்றோருக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவையும் அடங்கும் என்று கூறினார்.

மேலும், போக்குவரத்து நெருசலைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்குள்ள தம்பாக் பாயாவில் உள்ள லெபுஹ்ராயா அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) க்கு 5 கிலோமீட்டர் குறுக்குவழியை உருவாக்க மாநில அரசு மொத்தம் RM35 மில்லியனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் ரஹ்மட் கூறினார்.

அடுத்த ஆண்டு 12வது மலேசியா திட்டத்தின் (12MP) மூன்றாவது ரோலிங் திட்டத்தின் கீழ் இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இரு மாநிலங்களிலும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) முயற்சிகளை செயல்படுத்த இந்த ஆண்டு மொத்தம் RM30,000 ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா எரிசக்தி ஆணையத்தின் பகுதி இயக்குநர் நூர் அலி ஜா உமர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here