(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா, பத்து பிரண்டாம் தாமான் மெர்டெகாவில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் நேற்று உயிரிழந்த 13 வயது சிறுவனின் மரணம், மின்சாரம் தாக்கியதாலும் குற்றச் செயலாலும் ஏற்பட்டதல்ல என காவல்துறை உறுதி செய்துள்ளது.
பொதுமக்கள் குடும்பத்தினரின் மனநிலையை பாதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என, மலாக்கா தெங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாட்டிட் கேட்டுக்கொண்டார்.
நேற்று காலை 11.30 மணியளவில் கண்டறியப்பட்ட இந்த சம்பவத்தின் மரண காரணம், உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் இரசாயனப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தெரியவராது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், மின்சாரம் தாக்கியதற்கான எந்த சுவடும் அல்லது குற்றச் செயல் தொடர்பான ஆதாரங்களும் இல்லை என்றும், ஆனால் சிறுவனின் இடது விலா எலும்புப் பகுதியில் 1.5 செ.மீ அளவிலான சிறிய சுரண்டல் காயம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த காயம் சம்பவத்தின் போது குளியலறை துவைக்கல் தொட்டி அல்லது கழிப்பறை பாத்திரத்தின் மூலையில் மோதி ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், சம்பவ நேரத்தில் சிறுவன் வீட்டில் தனியாக இருந்ததாகவும், அவரது 50 வயதான தந்தை, தாயுடன் மற்றும் மற்றொரு மகனுடன் வெளியே சென்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த குளியலறையில் சிறுவன் மயக்க நிலையில் இருப்பதை கண்டனர்.
இவ்வழக்கின் உண்மையான மரண காரணம் மலாக்கா மருத்துவமனை நீதிமருத்துவத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வக பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் கூறினார்.
இந்த வழக்கு தற்போது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





















