ஆவணமற்ற குடியேற்றவாசிகள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம்

ஆவணமற்ற குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புவதற்கான மறுசீரமைப்பு திட்டம்  டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் கைருல் டிசைமி டாவூட் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நீட்டிப்புக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவரது கூற்றுப்படி, டிசம்பர் 2020 முதல் செவ்வாய் வரை நடத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 192,281 சட்டவிரோத குடியேறிகள் தானாக முன்வந்து அவரவர் நாட்டிற்கு திரும்பி செல்ல  பதிவு செய்துள்ளனர்.

இந்தோனேசியா (99,047), பங்களாதேஷ் (26,821) மற்றும் இந்தியா (23,844) ஆகிய மூன்று நாடுகளில் அதிக எண்ணிக்கையில்  பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில், 162,827 சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர் என்று அவர் மேலும் கூறினார்.

விமான நிலையம் மற்றும் ஜெட்டி டெர்மினல்களில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, அவர்கள் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக முகப்பிடங்களுக்கு வருமாறும், சீக்கிரம் வர வேண்டாம் என்றும் கைருல் டிஸைமி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட சில நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்தால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தானாக முன்வந்து தாயகம் திரும்ப இந்த திட்டம் அனுமதிக்கிறது.திட்டத்தில் சேர விரும்புவோர், அந்தந்த தூதரகங்கள் மற்றும் உயர் கமிஷன்களால் அங்கீகரிக்கப்பட்ட செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் மற்றும் அவர்கள் பிறந்த நாட்டிற்கான விமானம் அல்லது படகு டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது டச் ‘என்’ கோ இ-வாலட் மூலம் மட்டும் RM500 தொகையை செலுத்த வேண்டும், அத்துடன் புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் RT-PCR சோதனை முடிவு சீட்டைக் காட்ட வேண்டும். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நூற்றுக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) சிக்கித் தவித்ததாக  நேற்று செய்தி வெளியாகி இருந்தது. குடிநுழைவு அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற முடியாததால் அவர்கள் சிக்கித் தவித்தனர். இதனால் அவர்களில் பலர் தங்கள் விமானங்களைத் தவறவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here